எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை

நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் இல்லத்தில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இப்போதும் சோதனை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களாகவே வேலுமணிக்கு நெருக்கமான பலரது இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் சந்திரசேகர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கம். கடந்த 6-ம் தேதியே சந்திரசேகரின் இல்லம், அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை செய்த அதிகாரிகள் லேப்டாப் உள்ளிட்ட சில ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

இதேபோல் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான மற்றொருவரான சந்திரபிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான நிறுவனம், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான ஆலயம் அறக்கட்டளை ஆகிய இடங்களிலும் கடந்த 5 நாட்களாக சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வேலுமணியின் உதவியாளராக இருக்கும் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் என்பவரது இல்லத்திலும் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in