ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் சிக்கப்போவது யாரு?

விசாரணைக்குழுவால் முன்னாள் அமைச்சர்கள் பீதி
விசாரணை அதிகாரி டேவிதார்
விசாரணை அதிகாரி டேவிதார்

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பீதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக திமுக மட்டுமின்றி பாஜகவும் குற்றம்சாட்டியது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, 'ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

'தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களே டெண்டர் எடுத்துள்ளனர்' என்று தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி எம்பி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத்தில் 2002ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ' ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும்' என்று தெரிவித்தார். 'எஸ்.பி வேலுமணி தலைமையிலான உள்ளாட்சி நிர்வாகத் துறையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கமிஷன் பெற்றுள்ளனர்' என்று மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் தொடர்ந்து பேசி வந்தார்.

'மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மூன்று அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்ய செயல்படுத்தப்பட்டதாக' தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் பரபரப்பாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் குற்றம் சாட்டிய எஸ்.பி.வேலுமணி மட்டுமின்றி நிதியமைச்சர் குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர்கள், கனிமொழி குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் இந்த விசாரணை வளையத்திற்குள் கட்டாயம் வருவார்கள் என்று திமுகவினர் அறுதியிட்டு கூறுகின்றனர். இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் 'கிலி'யில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in