ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்!

இரவு 10 மணி வரை நடந்த பஞ்சாயத்து
ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில்
அதிமுகவினர் கோஷ்டி மோதல்!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், ஜெ.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், பா.மோகன், இரா.கோபாலகிருஷ்ணன், நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன், பா.பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக அமைப்பு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த இக்கூட்டம் துவக்கத்தில் இருந்த காரசாரமாக இருந்தது. அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிக அளவு, மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டதாக தெரிய வந்தது. இந்த நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதல் கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட மறுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சில மாவட்ட செயலாளர்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, " உட்கட்சி தேர்தல் முழுமையாக நடந்து முடிந்த பிறகு மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்" என்று கூறினார். ஆனால், அதை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம், எதிர்வாதம், சலசலப்பு என மாலை 4 மணிக்குத் துவங்கிய அதிமுக ஆலோசனை கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

Related Stories

No stories found.