திமுகவின் கஜானாக்களை குறிவைத்து முடக்குகிறதா அமலாக்கத்துறை?

ஸ்டாலின்
ஸ்டாலின்

அண்மைக்காலமாக பல மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு ஒத்துவராத கட்சிகளை வழிக்குக் கொண்டு வரவும், எதிரணியில் இருப்பவர்களை மிரட்டி ஒடுக்கவுமே பாஜக இந்த சோதனைகளை ஏவிவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. என்றபோதும் தமிழ்நாட்டில் மட்டும் அமலாக்கத்துறை ஆபரேஷன்களுக்கு கூடுதலாக இன்னொரு ஸ்பெஷல் காரணமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மணல் குவாரிகளில் சோதனை
மணல் குவாரிகளில் சோதனை

திமுகவின் நிதி ஆதாரங்களை சிதைப்பது அல்லது முடக்குவது என்பது தான் அந்த ஸ்பெஷல் காரணம். அதாவது திமுகவின் கஜானாக்களாக இருக்கும் நபர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை முடக்குவதன் மூலம் திமுகவுக்கு தேர்தல் செலவினங்களுக்கு நெருக்கடி கொடுப்பதுதான் பாஜகவின் திட்டம் என்கிறார்கள். 

இந்திய அளவில் தங்களுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளை எல்லாம் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புக்களை வைத்து ஆட்டம் காட்டுகிறது பாஜக. ஆளும் கட்சிகளை உடைத்து எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் ‘ஈர்த்து’ ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவால் அத்தகைய அனுகூலங்களை சாதிக்க முடியவில்லை. இங்கு பாஜகவை பலப்படுத்தவும் திமுக மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதனால் திமுகவின் நிதி ஆதாரங்களை முடக்குவது என்ற அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது என்கிறார்கள். 

மக்களவைச் தேர்தலைச் சந்திக்க திமுகவுக்கு எங்கிருந்தெல்லாம் பணம் வரலாம் என குறிவைத்து தாக்குகிறது அமலாக்கத்துறை. அந்தவிதத்தில் தான் திமுகவின் கஜானாக்களாக இருக்கும் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள்,  மணல் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து குறி வைக்கப்படுவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறை பிடியில் செந்தில்பாலாஜி
அமலாக்கத்துறை பிடியில் செந்தில்பாலாஜி

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு உள்ளானார்கள். இதில் செந்தில் பாலாஜி ஜூன் 14 -ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி திமுகவின் தேர்தல் ஸ்பெஷலிஸ்ட். கரூர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை சொல்லி அடித்து தோற்கடித்தவர். கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் அங்கே திமுகவுக்கு தொடர் வெற்றிகளை குவித்து வந்தார். இது, அந்தப் பகுதியில் ஆழமாக வேரூன்ற நினைக்கும் பாஜகவின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையானது.

டாஸ்மாக்கின் இதர வருமானங்களை ஒருமுகப்படுத்தியதன் மூலமாக திமுக தலைமைக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையெல்லாம் நூல்பிடித்துப் பார்த்து முதலில் அவரை முடக்கும் வேலையை பார்த்தது பாஜக. விளைவு... தற்போது உடல் மற்றும் மன ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீனில் வெளியில் வருவதற்கே பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படியே அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் முன்பு போல அவரால் ‘அனைத்தையும்’ சாதித்துக் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே. 

அதேபோல மணல் குவாரிகள் என்பது ஆளும் கட்சிக்கு அல்லுச் சில்லு இல்லாமல் வருமானம் கொட்டக்கூடியது. திமுகவுக்கும் அப்படித்தான். மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் மணல் அதிபர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஆதாரமாக இருக்கிறார்கள் என்பதை சரியாக மோப்பம் பிடித்து அவர்களை நோக்கியும் அதிரடி ரெய்டுகளை முடுக்கியது அமலாக்கத்துறை. இதன் மூலமும் ஆளும்கட்சிக்கு வருமானம் வரவேண்டிய வரத்துக்கால்கள் அடைபட்டு நிற்கின்றன.

திமுகவின் ஆகப் பெரும் செலவுகளுக்கு ஆதாரமாக நிற்கும் ஜெகத்ரட்சகன் எம்பி-யும் அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டுகளுக்கு தப்பவில்லை.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ஸ்டார் ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், சாராய ஆலைகள், தொழிற்சாலைகள் என ஏகப்பட்ட நிறுவனங்களின் அதிபரான ஜெகத்ரட்சகன் திமுகவுக்கான நிதிச்சுரங்கம் என்று கருதப்படுகிறார். கருணாநிதி காலத்திலும் சரி, இப்போதும் சரி திமுகவின் மிகப்பெரும் செலவினங்களை அவர் வசமே திமுக விட்டுவிடும். அவரும் செலவுகளுக்காக மலைக்காமல், தனக்குத் தந்த பணிகளை தரமாக செய்து முடிப்பார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் சில தொகுதிளுக்கான செலவினங்களை ஜெகத் தான் கவனித்துக்கொண்டதாகச் சொல்வார்கள். இம்முறை அவர் அப்படி ஏதும் பொறுப்பேற்கக் கூடாது என்பதற்காகவே அவர் மீது அமலாக்கத்துறை அம்பு ஏவப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஜெகத் தொடர்புடைய இடங்களில் ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிகளும் கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக கணக்குச் சொல்கிறது அமலாக்கத்துறை. 

எஸ். ஜெகத்ரட்சகன்
எஸ். ஜெகத்ரட்சகன்

கடந்த 2020-ம் ஆண்டும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக  ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது 89.19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அப்போது முடக்கினார்கள்.   

இப்போது ஜெகத்தை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஆ.ராசாவும் அமலாக்கத்துறையால் குறிவைக்கப்பட்டுள்ளார். ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி ‘கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என்கிறது அமலாக்கத்துறை.

ஆ.ராசா எம்.பி
ஆ.ராசா எம்.பி

ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் இம்முறை மத்திய அமைச்சர் எல்.முருகனை நிறுத்தப்போகிறது பாஜக எனச் சொல்லப்படும் நிலையில், ஆ.ராசாவை நிலைகுலைய வைக்கும் விதமாக அமலாக்கத்துறை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையும் கவனிக்க வைக்கிறது. இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்குள்ளாக கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த 12-ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறது வருமானவரித்துறை. மார்ட்டினுக்கும் திமுக தலைமைக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து புதிதாக ஏதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இந்த நடவடிக்கைகள் எல்லாமே திமுகவின் கஜானா கதவுகளை அடைக்கத்தானா என்ற கேள்வியுடன் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம்  பேசினோம். “திமுகவின் கஜானாவை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதெல்லாம் கற்பனையான வாதம். அப்படியென்றால் அவர்கள்தான் திமுகவின் நிதி ஆதாரம் என்று திமுக ஒப்புக்கொள்கிறதா? அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில்  அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது; அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் ஒன்றும் புனிதமானவர்கள் இல்லையே! குறிப்பாக, ஜெகத்ரட்சகன் பல்வேறு தொழில்களை செய்துவருகிறார். பல நூறு கோடி ரூபாய் வரவு செலவு செய்கிறார். அவர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இது மூன்றாவது முறை. ஆக, புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைகளைத்தான் இப்போதும் எடுத்துவருகிறது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை” என்று சொன்னார் அவர். 

இதனிடையே, அமலாக்கத்துறை நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை புரிந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், “இது சூனிய வேட்டை” என்று கடுமையாக சாடியுள்ளார். “பாஜகவினர் தங்களின் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது”  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை நடவடிக்கைகளில் அரசியல் நோக்கம் இல்லை என்கிறது பாஜக. அப்படியானால், அமலாக்கத்துறை வாகனங்கள் திமுகவினர் வசிக்கும் தெருக்களை மட்டும் வட்டமடிப்பது ஏன் என்பதுதான் சாமானியரும் கேட்கும் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in