புதுச்சேரியில் முழு அடைப்பு; திமுக கூட்டணி ஆதரவில்லை: அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது

புதுச்சேரியில் முழு அடைப்பு; திமுக கூட்டணி ஆதரவில்லை: அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று பன்னெடுங்காலமாகவே அந்த மாநில மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  அண்மையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இதனை வலியுறுத்தி பேசியிருந்தார்.  அதற்குப் பிறகு இந்த விவகாரம்  அதிகமாகசூடு பிடித்துள்ளது.

புதுச்சேரியின் அனைத்து தரப்பு மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.  திமுக சார்பில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியோடு இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் அதிமுக சார்பில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைகள் திறக்கப்பட்டால்  அவைகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் காவல்துறையிலும் மனு அளிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து இன்று காலை எப்போதும்போல் டீக்கடைகள், பாலகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை திறந்திருக்கின்றன.  தனியார் பேருந்துகள் குறைந்த அளவில்  ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்கு இயக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகளை அடைப்பது குறித்து புதுச்சேரி வர்த்தகர்கள் எதுவும் தெரிவிக்காத நிலையில் காலை 10 மணிக்கு மேல் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in