
``சென்னை கே.கே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை கை, கால் பெறுபவர்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை'' என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை உபகரணங்கள், அடையாள அட்டைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது; ‘’மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக முதல்வர் உயர்த்தி வழங்க அறிவித்தார். இந்த மாதம் முதல் அவை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது, இதனால் 21 வகையான 4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையான பாதிப்புள்ள 2 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதில்லை தாமதம் கூடாத என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களான கை, கால் பெறும் போது குறைந்த பட்ச கட்டனம் கூட இல்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளார். இனி, கே கே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் செயற்கை கை, கால் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை ‘’ என அமைச்சர் தெரிவித்தார்