‘ஊழலற்ற ஆட்சியமைப்போம்’ - கர்நாடகாவிலும் கால்பதிக்க அர்விந்த் கேஜ்ரிவால் திட்டம்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்‘ஊழலற்ற ஆட்சியமைப்போம்’ - கர்நாடகாவிலும் கால்பதிக்க அர்விந்த் கேஜ்ரிவால் திட்டம்!

கர்நாடகா மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு ஊழலற்ற ஆட்சியை வழங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநில மக்களுக்கு இலவச மின்சாரம், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் தரமான மருத்துவம் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

கர்நாடகாவின் தாவங்கரேவில் தனது முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், “ ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாபில் ஒரு அமைச்சரும், எம்எல்ஏவும் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எங்களால் எப்போதும் ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் கர்நாடகாவில் ஆளும் பாஜக மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் அரசை நடத்துகிறது” என்று தெரிவித்தார்

சன்னகிரி பாஜக எம்எல்ஏ மடல் விருபக்சப்பாவின் மகன் பிரசாந்த் குமாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 8.23 கோடி பணம் மீட்கப்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய கேஜ்ரிவால், “சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்து, வரும் சட்டசபை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வழங்க வேண்டும், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது, ஒருவர், ஏற்கனவே, இங்கு பாஜக ஆட்சியில் இருப்பதை நினைவூட்டினார். கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலத்தில் உள்ள பாஜக அரசால் ஏன் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமித் ஷா விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பிய அடுத்த நாளே, பாஜக எம்எல்ஏவின் மகன் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டார். அந்த எம்.எல்.ஏ இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக, மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்" என்று கூறினார்.

கர்நாடகாவில் உள்ள அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என்று மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாகக் கூறிய ஆம் ஆத்மி தலைவர், "டபுள் எஞ்ஜின் ஆட்சியில் ஊழல் இரட்டிப்பாகிறது. எங்களுக்கு புதிய எஞ்ஜின் அரசாங்கம் தேவை. எனவே கர்நாடகாவை மாற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் . நாங்கள் உறுதியான நேர்மையானவர்கள். ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம். இலவச மின்சாரம் தருவோம், நல்ல அரசுப் பள்ளிகளை உருவாக்குவோம், தரமான கல்வியை வழங்குவோம்" என்று கூறினார். கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in