
பதவிக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் பாணியில், தேசிய கட்சியான பாஜகவினரும் பதவிக்காக கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அருள் தலைமையிலான நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரிவான சக்தி கேந்திரா பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையொட்டி எழுந்த வாக்குவாதத்தில் பாரதி ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் ஆதரவாளர்கள் மறு பிரிவாகவும் மோதலில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தில் தொடங்கிய மோதல், கைகலப்பாக மாறியது. பரஸ்பரம் சட்டைகளை இழுத்துப் பிடித்து அடித்துக் கொண்டவர்கள், அங்கிருந்த நாற்காலிகளை கொண்டும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் ஒருசிலர் உருட்டுக் கட்டைகள் மற்றும் இரும்பு ராடுகள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் தனியார் மருத்துவமனைகளின் சேர்த்து சிகிச்சைக்கு வழி செய்தனர்.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கட்சிப் பதவிக்காக பாஜகவினர் இப்படி மோதிக் கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.