கேரளாவுக்கு ஆதரவாக செயல்படும் ஓபிஎஸ் மகன்?

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
கேரளாவுக்கு ஆதரவாக
செயல்படும் ஓபிஎஸ் மகன்?

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசுக்கு சாதகமாக தேனி மக்களவை தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செயல்படுவதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தாக்கலான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கேரளா அரசு சார்பாக புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ உச்ச நீதிமன்றம் 2014ல் வழங்கிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான உத்தரவுக்குப் பின், அணைப்பகுதியில் பலமுறை கடும் மழைப்பொழிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அணை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, அணையின் தற்போதைய நிலவரம் குறித்து வடிவமைப்பு, புவியியல், நீரியல், அணை பாதுகாப்பு, கட்டுமானம், நில அதிர்வு உள்ளிட்ட துறைகளில் திறன் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் நிபுணர் குழு விரிவாக ஆய்வு நடத்த வேண்டும். இப்பணிகளில் சர்வதேச நிபுணர்களையும் சேர்த்துக்கொள்வது குறித்து, மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

கேரள அரசின் இந்த புதிய பிரமாணப்பத்திரம் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், கேரள தரப்பில் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதமே மத்திய நீர்வள ஆணையம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அறிவியல் பூர்வமாக அணையை ஆய்வு செய்து 14 ஆண்டுகளாகி விட்டது என்றும் கூறியது. அதற்கு உடனடியாக தமிழக அரசு பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பத்து நாட்கள் கழித்து தான், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நீர்வள ஆணையக்குழு உறுப்பினராக தேனி அதிமுக எம்பி தானே இருக்கிறார்.. அவர் யார் பக்கம் நிற்கிறார் ?

கேரளாவிற்கு ஆதரவாக மத்திய நீர்வள ஆணையம் தான் முதலில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தது. அதன் பின் தான் கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையக்குழுவில் உறுப்பினராக உள்ள தேனி எம்பி ரவீந்திரநாத் குமாரின் ஒப்புதல் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் எப்படி நீர்வள ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்? எனவே, முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசுக்கு சாதகமாவே ரவீந்திரநாத் குமார் செயல்படுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், மத்திய நீர்வள ஆணையத்தின் பிரமாணப்பத்திரம் தான், தமிழகத்திற்கு எதிரான ஆயுதம். மத்திய அரசை ரவீந்திரநாத் குமார் எம்பி ஆதரிக்கட்டும். ஆனால், முல்லை பெரியாறு பிரச்சினையின் மூலம், அவருக்கு வாக்களித்த தேனி மாவட்ட மக்களை அவர் வஞ்சித்து விடக்கூடாது.

தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக 2014ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், முல்லை பெரியாறு தொடர்பாக கேரள அரசியல் கட்சிகளோ, தனிநபர்களோ தாக்கல் செய்யும் மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று ரிட் மனுவை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அது தான் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்.

இவ்வாறு அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in