ஈரோடு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மிக்சர் சாப்பிட்டு பிரச்சாரம் செய்த வேட்பாளர்

மிச்சர் சாப்பிடும் வேட்பாளர் ஆறுமுகம்
மிச்சர் சாப்பிடும் வேட்பாளர் ஆறுமுகம் ஈரோடு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மிக்சர் சாப்பிட்டு பிரச்சாரம் செய்த வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மிக்சர் சாப்பிட்டு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 77 பேர் களத்தில் உள்ளனர்.  அவர்களில் ஒருவராக மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆறுமுகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.  அவருக்கு டம்ளர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் டம்ளர் சின்னத்துடன் அவரும் ஈரோடு வீதிகளில் வாக்கு கேட்டு வலம் வந்தார். 

இன்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும் நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளின் சார்பில் ஏராளமான பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  பல ஆயிரக்கணக்கான ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்று கூறி நேற்று முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு ஆறுமுகம் வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று,  எதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்பதை உணர்த்தும் விதமாக தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரியின் அலுவலகம் எதிரே மிக்சர் சாப்பிட்டு தனது பிரச்சாரத்தை ஆறுமுகம் நிறைவு செய்தார். தொகுதியில் உள்ள குடிமகன்கள் அனைவரும் தனக்கு வாக்களித்தால் தனது வெற்றி நிச்சயம் என்ற பெருமிதத்தோடு தனது பிரச்சாரத்தை  அவர் நிறைவு செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in