மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசியதாக சொல்வது பொய் செய்தி: மம்தா பானர்ஜி கோபம்

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதான கல் வீச்சு சம்பவங்கள் குறித்து "போலி செய்திகளை" பரப்புபவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். அண்டை மாநிலமான பிஹாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலத்தில் அல்ல என்றும் அவர் கூறினார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கல் வீச்சு சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “பிஹாரில் இந்த சம்பவம் நடந்ததாகவும், மக்கள் கோபமடைந்ததால் ரயிலை தாக்கியிருக்கலாம். ஒருவேளை பிஹார் மக்கள் தங்களுக்கு இன்னும் வந்தே பாரத் ரயில் கிடைக்காததால் வருத்தமடைந்திருக்கலாம். பிஹார் அரசு பாஜகவுடன் கூட்டணியில் இல்லாததால், அம்மாநிலத்திற்கு ரயில் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

மேலும், “மேற்கு வங்கத்தை பல தொலைக்காட்சி சேனல்கள் அவதூறு செய்துள்ளன என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். பொய் செய்திகளை அவதூறாகக் காட்டி, பொய்யான தகவல்களைக் கொடுத்து, வங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது 100 புதிய ரயில்களைக் கொடுத்தேன். ஆனால் கடந்த 11 வருடங்களில் எங்களுக்கு ஒரு ரயில் கூட கிடைக்கவில்லை. இப்போது கிடைத்தது இந்த ஒரு ரயில் மட்டுமே. இதனைக் கொடுத்துவிட்டு இப்போது அவதூறும் பரப்புகிறார்கள்” என்று கூறினார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கற்கள் வீசப்பட்டன. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பேசிய கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஏகலப்ய சக்ரவர்த்தி, “ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு தொடர்பான வீடியோ காட்சிகளை ஸ்கேன் செய்ததில், முதல் சம்பவம் மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்திலும், செவ்வாய்கிழமை 2வது சம்பவம் பிஹாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்திலும் நடந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

முதல் சம்பவத்தில் கண்ணாடி கதவு உடைந்தது, இரண்டாவது சம்பவத்தில் ஜன்னல்கள் சேதமடைந்தன. எவ்வாறாயினும், இந்த சம்பவங்களில் பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவங்கள் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு இடையே ஒரு முக்கிய அரசியல் புள்ளியாக மாறியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் கல் வீச்சு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை தெரிவிக்க பழைய படத்தைப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இந்த சம்பவங்கள் பாஜகவால் திட்டமிடப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in