மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம்
மதுவிலக்கு கொள்கையில் 
இரட்டை வேடம் போடும் திமுக!

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016- ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், திமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் ' 2021- ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் இப்போது டாஸ்மாக் மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது திமுக அரசு.

2020-2021- ம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை வருவாய், 2021-2022- ம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்ற நிலையில், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் 2022-2023- ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் 40 ஆயிரம் கோடி ரூபாய் தாண்டக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் ‘பூரண மதுவிலக்கு’ அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, சென்ற ஆண்டு பொதுத் தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டில் எதையும் செய்யாமல், மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது' என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் , ' சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி துளியும் கவலைப்படாமல், மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல். தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று' அதிமுக சார்பில் தமிழக முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in