``114 தமிழர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. விரைவில் 114 பேரும் மீட்கப்படுவார்கள். போர் உக்கிரமாக நடக்கும் பாலஸ்தீன பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை'' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணிக்காகவும், சுற்றுலாவுக்காகவும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்ற நிலையில் அவர்களின் நிலை என்ன என கேள்வி எழுந்தது. இஸ்ரேலில் போர் பதற்றம் நிலவிய பகுதியில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்து, ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை அறிவித்தது. உடனடியாக இந்தியர்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன்படி, டெல்லியிலிருந்து நேற்றைய தினம் முதலாவது மீட்பு விமானம் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு அனுப்பப்பட்டது.
அங்கிருந்து விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். டெல்லிக்கு வந்த 212 இந்தியர்களில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இஸ்ரேலில் சிக்கித் தவித்த நிலையில், தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களில் 14 தமிழர்கள் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்றனர். மேலும், 7 பேர் நேரடியாக கோவை சென்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்களில் 14 பேர் சென்னை வந்தடைந்தனர். இன்னும் 114 தமிழர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. விரைவில் 114 பேரும் மீட்கப்படுவார்கள்.
பாலஸ்தீன பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை. இங்கிருந்து இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாயகம் திரும்பிய மாணவர்களின் படிப்புக்கு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!
செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!