
பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கவில்லை எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92-ஐ அள்ளி ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி கட்சி. பெரும் முஸ்தீபுகளுடன் முன்மொழியப்பட்ட பகவந்த் மான், முதல்வராகிவிட்டார். பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் மார்ச் 16-ல் நடந்த பதவியேற்பு விழாவில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இன்று காலை 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். சண்டிகரில் உள்ள குரு நானக் தேவ் அரங்கில், நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பெண் எம்எல்ஏ பல்ஜித் கவுர் கவுர் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர் பதவியில் அமர்ந்து வாழ்த்துகளையும் பெற்றுவிட்டனர். ஹர்பல் சிங் சீமா, குர்மீத் சிங் மீட் ஹேயர் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் முதல் முறையாக எம்எல்ஏ ஆனவர்கள். அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் முதல் முடிவாக 25,000 வேலைவாய்ப்புகளை அறிவித்து அசத்திவிட்டார் முதல்வர் பகவந்த் மான்.
இப்படி பல சந்தோஷங்களுக்கு நடுவே சில சங்கடங்களையும் எதிர்கொள்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆம், அக்கட்சியின் அபார வெற்றி முகங்களாகப் பார்க்கப்பட்ட பலர், ஏனோ அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
முந்தைய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியை பகதூர் தொகுதியில் 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற லாப் சிங் உகேகே, எளிய பின்னணியிலிருந்து வந்தவர். அவரது வெற்றி பலராலும் வியந்து பார்க்கப்பட்டது. ஊடகங்கள் அவரது குடும்பப் பின்னணி பற்றி பெருமளவில் செய்திகளை வெளியிட்டன. வெற்றிக்கொண்டாட்டத்தின்போது, “சரண் ஜீத் சிங்கைத் தோற்கடித்த லாப் சிங் உகேகே யார் தெரியுமா? செல்போன் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்ப்பவர். அவரது தாய், ஒரு பள்ளியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பவர்” என்று அத்தனைப் பெருமிதமாகச் சொன்னார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆனாலும், லாப் சிங்குக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
அதேபோல், சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலை அவரது சொந்தத் தொகுதியான லம்பியில், 11,396 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற குர்மீத் சிங் குடியானுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகி ஆம் ஆத்மி கட்சியில் ஐக்கியமானவர் அவர்.
அதேபோல, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவையும், சிரோமணி அகாலி தளத்தின் பிக்ரம் சிங் மஜிதியாவையும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜீவன்ஜ்யோத் கவுருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
சரண்ஜீத் சிங் சன்னி போட்டியிட்ட இன்னொரு தொகுதியான சம்கோர் சாஹிப் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண் மருத்துவர் சரண்ஜீத் சிங் (அதே பெயர்தான்!) தோற்கடித்தார். அவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவில்லை. செல்வாக்கு மிக்க தலைவர் எனக் கருதப்பட்ட முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை பட்டியாலா நகர்ப்புறத் தொகுதியில் அஜித் சிங் கோலி, தோற்கடித்தார். ஜலாலாபாத் தொகுதியில் சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பிர் சிங் பாதலை ஜக்தீப் காம்போஜ் தோற்கடித்தார். அவர்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமன் அரோரா, பல்ஜிந்தர் கவுர், சர்வ்ஜித் கவுர் மானுகே போன்றோரும் அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வரையும் சேர்த்து மொத்தம் 18 அமைச்சர் பொறுப்புகள் இருக்கின்றன. இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதுவரை விமர்சனங்களும் தொடரும்!