கூட்டணிக்கு குண்டு வைத்த ராமதாஸ்!

பழைய பாதைக்குத் திரும்புகிறதா பாமக?
கூட்டணிக்கு குண்டு வைத்த ராமதாஸ்!
ஈபிஎஸ் - அன்புமணி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே, அதிமுக கூட்டணிக்குள் அணுகுண்டைப் பற்றவைத்துப் போட்டிருக்கிறது பாமக. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதுதான் அந்த அணுகுண்டு. அதிமுகவுடனேயே கூட்டணி தொடரும் என்று அறிவித்ததற்கு மாறாக, இப்படியான முடிவை எடுத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பாமகவின் திடீர் திசைமாற்றம் உணர்த்தும் சங்கதி என்ன?

கூட்டணிக் கணக்கின் வெற்றி தோல்விகள்

தேர்தல் ரேஸில், வெற்றிபெறும் குதிரையை மிகச் சரியாகக் கணித்து அதில் சவாரி செய்து வெற்றிகளை ஈட்டிய கட்சி பாமக. 1998 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 1999 மக்களவைத் தேர்தல் (திமுக), 2001 சட்டப்பேரவைத் தேர்தல் (அதிமுக), 2004 மக்களவைத் தேர்தல் (திமுக), 2006 சட்டப்பேரவைத் தேர்தல் (திமுக) என வெற்றிக் கூட்டணியில் பாமக இடம்பெற்று பலனை அறுவடை செய்தது.

ஆனால், 2009 முதலே பாமகவுக்குத் தொடர்ந்து சறுக்கல்தான். 2009 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 2011 சட்டப்பேரவைத் தேர்தல் (திமுக), 2014 மக்களவைத் தேர்தல் (பாஜக), 2016 சட்டப்பேரவைத் தேர்தல் (தனித்துப் போட்டி), 2019 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 2021 சட்டப்பேரவைத் தேர்தல் (அதிமுக) என ராமதாஸ் போட்ட கூட்டணிக் கணக்குகள் பாமகவுக்கு அனுகூலம் தரவில்லை. ஒரு கட்டத்தில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற தனிக் குரலும் பாமகவைத் தவிக்கவிட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்...
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்...

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சூடுபட்டுக்கொண்டதால், மீண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு ஏற்பட்டது. அது திமுகவா, அதிமுகவா என்ற கேள்வி எழுந்தபோது, வண்டியைத் திமுக பக்கம் திருப்புவதில் பாமகவுக்குப் பல சங்கடங்கள் இருந்தன. 2011-ல் தனது இல்லத் திருமண நிகழ்வுக்காக அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்த ராமதாஸூடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டவர் கருணாநிதி. ஆனால், ஸ்டாலினிடம் அந்த வேலையெல்லாம் ஆகவில்லை. கருணாநிதியுடன் அரசியல் செய்த ராமதாஸால் ஸ்டாலினிடம் இறங்கிச் செல்ல முடியவில்லை. அதேவேளையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சரியான தலைமை இல்லாமல் திண்டாடும் அதிமுக, வெற்றிலை பாக்கு வைத்து பாமகவைக் கூட்டணிக்கு அழைத்தது. அதைக் கடந்தும் சிலபல பேரங்கள் படிந்ததால், சமரசங்கள் ஏற்பட்டு அதிமுக-பாமக கூட்டணி உருவானது.

அதிமுக, பாஜக, பாமக தலைவர்கள் ஒரே மேடையில்...
அதிமுக, பாஜக, பாமக தலைவர்கள் ஒரே மேடையில்...

2011-ல், “திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை” என அறிவித்துவிட்டு, 2019-ல் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது பாமக. அதுவும் அதிமுக மீது ஊழல் புகார்களை வாசித்துவிட்டு, கூட்டணி சேர்ந்த பாமகவின் பிம்பம் பொதுவெளியில் சேதாரமானது. எனினும், விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல்தான் அதிமுக கூட்டணியிலேயே பாமக நீடித்தது.

அடக்கிவாசித்த அதிமுக

இக்கூட்டணியில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்காத முக்கியத்துவம் பாமகவுக்குக் கிடைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியைத் தேமுதிக உதறியபோதும்கூட, பாமக இருக்கிறதே என்று தெம்பாக இருந்தது அதிமுக. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகும்கூட பாமக விஷயத்தில் அதிமுக தலைமை மிகுந்த அனுசரணையாகவே இருந்தது. அதிமுகவைச் சீண்டிய அன்புமணிக்குப் பதிலடி தந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, பெங்களூரு புகழேந்தி அதிமுகவிலிருந்து தூக்கியெறியப்பட்டது ஓர் உதாரணம்.

இதற்கெல்லாம் காரணம், ஆளுங்கட்சியான திமுகவை உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்க கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டியது அவசியம் என்று அதிமுக தலைமை கருதியதுதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு வழக்கம்போல் அதிமுகவிடமிருந்து ஒதுங்கியே இருந்தது பாமக. பேரவைச் செயல்பாடுகளில் அதிமுகவுடன் பாமக இணக்கமாகவும் இருக்கவில்லை. இதை எடப்பாடி பழனிசாமியே சில சந்தர்ப்பங்களில் ராமதாஸுக்கு சுட்டிக்காட்டியதாகவும், அதை ராமதாஸ் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், திமுக எம்எல்ஏ-க்கள் போல பாமக எம்எல்ஏக்களும் ஸ்டாலின் புகழ் பாடினார்கள்.

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை, வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகள் நினைவாக சமூக நீதி மணி மண்டபம், வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது என திமுகவின் அறிவிப்புகளுக்கெல்லாம் ராமதாஸ் தொடர்ந்து பாராட்டு அறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இவையெல்லாம் அதிமுகவுக்கு அதிருப்தி தந்தாலும், தேர்தலை மனதில் கொண்டு மவுனம் காத்தது.

அன்புமணி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்...
அன்புமணி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்...

உச்சகட்டமாக, அண்மையில் அன்புமணியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குடும்பத்துடன் சென்று சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் தந்தார். ஆனால்,கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியைத் தனியாகச் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். திருமண வரவேற்பில் ஸ்டாலின் தொடங்கி கமல்ஹாசன்வரை பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், அன்றைய தினம் சென்னையில் இருந்தும் அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இதற்குக் காரணம், பாமக மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்திதான் என்கிறார்கள்.

செம்மலை
செம்மலை

திமுகவுக்குச் சாதகமா?

பாமகவின் இதுபோன்ற நகர்வுகள், அக்கட்சி திமுக முகாமுக்கு மாறும் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை பாமக வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பும் ஒருவகையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவும் வகையிலேயே இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தே வட மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க, தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்கு செய்யும் உதவிதானே என்ற குரலும் கேட்கிறது.

ஆனால் இதையெல்லாம் மறுக்கும் பாமக தரப்பு,“இந்தத் தேர்தல் திமுகவுக்கே சவாலாகத்தான் இருக்கும். பாமகவின் முடிவு என்பது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும்தான். கால அவகாசம் குறைவு, கூட்டணி பேசி சீட்டு வாங்குவது சிரமம். அதனால்தான் இந்த முடிவு. தேர்தலுக்குப் பிறகு சேர்மன் பதவியை வெல்ல வாய்ப்புள்ள இடங்களில் தேவைப்பட்டால் அதிமுகவுடன்தான் இணைந்து செயல்படுவோம். ஆக, பாமகவின் இந்த முடிவு இந்தத் தேர்தலுக்கு மட்டும்தான்” என்கிறது.

‘அதிமுகவுக்குப் பாதகமில்லை’

பாமக தரப்பில் இப்படிச் சொல்லப்பட்டாலும், அக்கட்சியின் முடிவைப் பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது அதிமுக. “பாமகவின் முடிவால் இத்தேர்தலில் அதிமுகவினர் அதிகம் போட்டியிட வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பேரவையில் நாங்கள் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறோம். பாமகவினரோ பாராட்டுகிறார்கள். தேர்தலில் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் கொள்கைப்படி தனித்துச் செயல்படுகிறார்கள். பாமகவைப் பொறுத்தவரை கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் அவர்களுடைய விருப்பம்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது மற்றவர்கள் நினைப்பதுபோல அல்ல. அந்தந்த ஊர்களில் உள்ள வார்டுகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அதில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும். பாமக கூட்டணியால் எங்களுக்கு லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு. பாமக விலகியதால் பட்டியலின, பழங்குடியின, இதர சாதியினரின் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பாமகவின் முடிவால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்கிறார் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை.

ஜி.கே.மணி, மு.க.ஸ்டாலின், அன்புமணி...
ஜி.கே.மணி, மு.க.ஸ்டாலின், அன்புமணி...

திமுகவைக் கவரும் உத்தியா?

அடுத்த சட்டபபேரவைத் தேர்தலில் ‘மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான்’ என்று அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவைதான் பாமகவுக்கு முக்கியம் எனலாம். தற்போது அதை நோக்கித்தான் பாமக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில்தான் வருகின்றன. இந்த 7 மாவட்டங்களிலும் பாமக தான் செல்வாக்கான கட்சி. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அன்புமணி முதல்வர் என்று அறிவித்து, இந்தப் பகுதிகளில் 15 சதவீத வாக்குகளுக்கும் மேலாகப் பாமக பெற்றது.

தற்போதுவரை திமுகவிடமிருந்து பாமகவுக்குப் பாராமுகம்தான். இந்த 9 மாவட்டத் தேர்தலில் பாமக கணிசமான வெற்றிகளையும், வாக்கு வங்கியையும் தக்கவைத்துக்கொண்டால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் திமுகவிடமிருந்து கூட்டணிக்கு அழைப்பு வரும் என்றும் ராமதாஸ் நம்புகிறார். ஏற்கெனவே மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பாமக பெறவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வெற்றி கிடைக்காது என்றும் ராமதாஸ் கருதுகிறார். எதிர்காலத் தேர்தலுக்காக ஆழம் பார்க்கவே தனித்துப் போட்டி என்ற கடை விரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அது போணியாகுமா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்!

Related Stories

No stories found.