மத்திய அரசுடன் மோதும் பகவந்த் மான்: பின்னணி என்ன?

மத்திய அரசுடன் மோதும் பகவந்த் மான்: பின்னணி என்ன?

பஞ்சாப் முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பகவந்த் மான்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராகச் செயல்படும் சண்டிகர் நகரம், ஒரு ஒன்றியப் பிரதேசமாகவும் (Union Territory) இயங்குகிறது. இந்நிலையில், சண்டிகர் மீது யாருக்கு அதிக அதிகாரம் எனும் போட்டி மத்திய அரசுக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், சண்டிகரைப் பஞ்சாபுடன் இணைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியிருக்கிறது பகவந்த் மான் அரசு. சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தை நிர்வகிப்பதில் சமநிலையைக் குலைக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுவதாகவும் பகவந்த் மான் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பின்னணி என்ன?

சண்டிகர் நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு அலுவலர்களுக்கு நிகரான சம்பளம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் வெளியிட்டார். இதன்படி, சண்டிகர் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது. பெண் ஊழியர்கள், குழந்தைப் பராமரிப்புக்காக ஒரு வருடம் விடுப்பு எடுக்கலாம் என முன்பு இருந்ததை இரண்டு வருடமாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

இவை அனைத்தும், சண்டிகர் அரசு ஊழியர்கள் முன்வைத்து நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள் என்று அமித் ஷா கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு, காங்கிரஸ், அகாலி தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பஞ்சாப் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் இதைக் கண்டித்தது. சண்டிகர் மீதான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று பகவந்த் மான் உறுதியாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தத் தீர்மானத்தை பகவந்த் மான் அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் தீர்மானம் தொடர்பான நோட்டீஸில், பல்வேறு முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பகவந்த் மான்.

1966-ல் கொண்டுவரப்பட்ட பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியாணா உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு ஒன்றியப் பிரதேசமாக இமாசல பிரதேசம் உருவாக்கப்பட்டது. தற்காலிக ஒன்றியப் பிரதேசமாக சண்டிகரும் உருவாக்கப்பட்டது.

பஞ்சாப் - ஹரியாணா என இரு மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு மாநிலங்களும் சண்டிகரை நிர்வகித்துவந்தன. பக்ரா பீஸ் மேலாண்மை வாரியத்தின் நியமனம் தொடர்பான பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இரு மாநிலங்களிலும் பகிர்ந்து நிர்வகித்துவந்தன.

இது குறித்த தகவல்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் பகவந்த் மான், பக்ரா பீஸ் மேலாண்மை வாரிய நிர்வாகத்தின் அதிகாரிகள் நியமன விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். 60 :40 எனும் விகிதாச்சார அடிப்படையில் தத்தமது அதிகாரிகளைக் கொண்டு பஞ்சாபும், ஹரியாணாவும் சண்டிகரை நிர்வகித்துவந்தன என்றும், தற்போது வெளியாட்களை அந்தப் பதவிகளில் மத்திய அரசு நியமித்துவருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, பஞ்சாபுக்கு மத்திய அரசின் எல்லா உதவிகளும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in