'யார் காலிலும் விழ நான் சாதாரண ஸ்டாலின் அல்ல...!'

திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
'யார் காலிலும் விழ நான் சாதாரண ஸ்டாலின் அல்ல...!'

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இதுதிருமண விழா. இருந்தாலும் இங்கே பேசிய பலர், பல கோரிக்கைகளை எடுத்துரைத்து முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார்கள். இவனிடத்தில் சொன்னால், அது நியாயமாக இருந்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் மட்டமின்றி, உள்ளாட்சித் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த உணர்வோடுதான், இந்த மேடையில் பேசிய நண்பர் தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், வேல்முருகன் இன்றைக்கு ஏற்பட்டுள்ள சில சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டி அதை எல்லாம் நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். நிச்சயமாக, உறுதியாக, கலைஞர் என்னவெல்லாம் சாதித்தாரோ, அவர் வழி நின்று நானும் சாதிப்பேன்.

கலைஞர், "பொன்.குமார்" என்பதைவிட "என் குமார்" என்றுதான் சொல்வார். அந்தளவுக்கு அவர் மனதில் சிறப்பான இடம்பிடித்தவர் பொன்.குமார். கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்.குமார் விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவதற்காக பொதுவாழ்வில் ஈடுபட்டவர். அவர் கட்சி சார்பில் இந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டபோது, 'இந்தமுறை நிறைய கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது. எனவே, வாய்ப்பு இருக்காது என்று கருதுகிறேன். எனவே, தயவுசெய்து வருத்தப்படாதீர்கள். ஆனால், நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து என்ன பணி செய்ய நினைத்தீர்களோ, அதைச் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன்' என்றேன். அதேபோல திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் முதல் வாரிய தலைவராக பொன்.குமாரைத்தான் நியமனம் செய்தேன். அவர் அந்தப் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார். மணமக்கள் வினோத்குமார், ரேவதி என்றைக்கும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகிறேன்.

நான் அண்மையில் துபாய்க்கு சென்றபோது, ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு முன்பு பேசியவர்களே அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு நான் டெல்லி சென்று தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமர், அமைச்சர்களிடம் நேரில் வலியுறுத்தியதை, சிக்கலில் இருந்து தப்பிக்கவே தான் டெல்லி சென்றுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நான் டெல்லி சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேனே தவிர, வேறல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கலைஞரின் மகன் என்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பான். எனக்குத் துணையாக நீங்கள் நிற்க வேண்டும்

இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்.

Related Stories

No stories found.