
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக, பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றிருந்த நிலையில், சண்டிகரிலிருந்து ஹோஷியார்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லவிருந்த முதல்வர் சரண்ஜீத் சிங்கின் பயணம் தடைபட்டது. ஜலந்தரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேச மோடி வந்திருந்ததால், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி சண்டிகரில் ’நோ ஃப்ளை ஸோன்’ அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சரண்ஜீத் சிங் சன்னி, “நான் ஒரு முதல்வர். ஹோஷியார்பூர் செல்லவிருந்த நிலையில் என்னைத் தடுத்து நிறுத்த நான் ஒன்றும் பயங்கரவாதி அல்ல. இது சரியான வழிமுறை அல்ல” என்று குமுறியிருக்கிறார்.
ஹோஷியார்பூரில் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சண்டிகரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல சரண்ஜீத் சிங் சன்னி திட்டமிட்டிருந்தார். ஹோஷியார்பூரில் தரையிறங்க ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சண்டிகரிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்ப முடியாமல் அங்குள்ள ஹெலிபேடில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தார் சரண்ஜீத் சிங் சன்னி. பின்னர், ஹோஷியார்பூர் செல்ல முடியாமல் வீடு திரும்பினார்.
ஜனவரி 5-ல், பிரதமர் மோடி பஞ்சாபுக்குச் சென்றிருந்தபோது, விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் ஃபெரோஸ்பூர் அருகே மேம்பாலத்தில் ஏறத்தாழ அரை மணி நேரம் அவரது வாகன அணிவகுப்பு காத்திருக்க நேர்ந்தது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகப் பஞ்சாப் சென்றிருந்த மோடி தனது பயணத்தை ரத்துசெய்து டெல்லி திரும்பினார்.
இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகவும், அதற்குப் பஞ்சாப் காங்கிரஸ் அரசும் காவல் துறையினரும்தான் காரணம் என்றும் மத்திய அரசும் பாஜகவினரும் குற்றம்சாட்டினர்.
அதன் பின்னர், பிப்ரவரி 9-ல் லூதியானா மற்றும் ஃபதேகர் சாஹிப் மாவட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி மூலம் கலந்துகொண்டார் மோடி. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று அவர் பஞ்சாப் சென்றிருந்தார்.
ஜலந்தரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “2014-ல் பிரதமர் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. நான் பதான்கோட்டுக்கும் இமாசல பிரதேசத்துக்கும் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், என் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவர்களின் இளவரசர் (ராகுல் காந்தி) அமிர்தசரஸில் இருந்தார். ஆக, எதிர்க்கட்சிகள் பணிபுரிய அனுமதிக்க மறுக்கும் பழக்கம் காங்கிரஸுக்கு இருக்கிறது” என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.