‘கட்சியிலிருந்து நீக்க சதி செய்கிறார்கள்’ - கசப்பைப் பதிவுசெய்த ஹர்திக்!

‘கட்சியிலிருந்து நீக்க சதி செய்கிறார்கள்’ - கசப்பைப் பதிவுசெய்த ஹர்திக்!

குஜராத்தில் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடி கவனம் ஈர்த்தவரும், பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஹர்திக் படேல் தற்போது கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அரசியல் ரீதியாகவும் சமூக அளவிலும் செல்வாக்கு மிக்க பாடிதார்கள், 2015-ல் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு கிடைக்கப் பெற வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் குதித்தனர். பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி எனும் பெயரில் இணைந்து படேல் சமூகக் குழுக்கள் நடத்திய போராட்டம், 2015 முதல் 2019 வரை நீடித்தது. இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல், குஜராத்தின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டார். ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இணைந்தார்.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மறுபுறம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிற மாநிலங்களிலும் கால் பதிக்கத் தயாராகிவரும் ஆம் ஆத்மி கட்சி, பிற கட்சிகளிலிருந்து தலைவர்களை வளைத்துப்போடும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. இமாசல பிரதேசம், காஷ்மீரைச் சேர்ந்த பிற கட்சித் தலைவர்களைத் தங்கள் கட்சிக்கு ஈர்த்துவருகிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

அந்த வகையில், ராஜ்கோட் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ இந்திராணி ராஜ்யகுருவும் அவரது ஆதரவாளர் வஸ்ராம் சகதியாவும், சமீபத்தில் டெல்லி சென்று அர்விந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துவிட்டனர். இப்படியான பிரச்சினைகளுக்கு நடுவில், ஹர்திக் படேலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். யாரையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார்கள்.

பாடிதார் சமூகத்தைச் சேர்ந்த நரேஷ் படேலைக் கட்சியில் சேர்ப்பதில் கட்சித் தலைமை தயக்கம் காட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். குஜராத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சவுராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த நரேஷ் படேல், காங்கிரஸ் கட்சியில் சேர்வதன் மூலம் கட்சி பலம்பெறும் என்பது ஹர்திக்கின் கருத்து. மொத்தம் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், 52 பேர் சவுராஷ்டிரா பகுயிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் செல்வாக்குடன் இருக்கும் நரேஷ் படேலைக் காங்கிரஸ் இழப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என ஹர்திக் கருதுகிறார்.

பாடிதார் போராட்டத்தால் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், தற்போது பாஜகவை வீழ்த்துவதில் முனைப்பு காட்டாமல் தங்களுக்குள் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். “நான் உண்மையைத்தான் சொல்கிறேன். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த என்னாலான முயற்சிகளை எடுக்கிறேன். ஆனால், கட்சிக்குள் இதுதான் நடக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறியிருக்கும் ஹர்திக் படேல், இவ்விஷயத்தில் குஜராத் மாநில காங்கிரஸார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.

இதற்கிடையே, காங்கிரஸிலிருந்து ஆம் ஆத்மி கட்சிக்குத் தலைவர்கள் செல்வது காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவு என ஆம் ஆத்மி கட்சியினரே விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in