‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா - மீண்டும் வெடித்தது சர்ச்சை

 ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா - மீண்டும் வெடித்தது சர்ச்சை

இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதி சர்ச்சைக்குள்ளான, ‘அம்பேத்கர் & மோடி’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார், இவ்விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை.

சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு ‘ அம்பேத்கரும் மோடியும்’ என்ற இந்த புத்தகம் எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, இப்புத்தகத்திற்கு இளையராஜா அணிந்துரை எழுதியது விவாதப்பொருளாக மாறியது. அந்த அணிந்துரையில் ‛பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு செய்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தார். இந்த அணிந்துரை சர்ச்சைக்குள்ளான சில வாரங்களுக்கு பிறகு, மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் இளையராஜா.

இந்த சூழலில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இப்புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் இளையராஜா இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்புத்தகத்தின் அட்டையிலேயே அணிந்துரை இளையராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “அம்பேத்கரின் கனவு அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பது, அதனை தேசியக் கல்விக்கொள்கையின் மூலம் பிரதமர் நனவாக்கி வருகிறார். மேலும் அம்பேத்கரின் திட்டங்களை எல்லாம் பிரதமர் நிறைவேற்றி வருகிறார்” என தெரிவித்தார்.

‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்துக்காக அணிந்துரை எழுதி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா, தற்போது புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in