
மாநிலங்களவை உறுப்பினரான இசைஞானி இளையராஜா இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவில் விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நியமன எம்பிக்களாக அமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 18-ம் தேதி எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.
இளையராஜா அப்பாேது அமெரிக்காவில் இருந்ததால் அவரால் அன்றைய தினம் பதவியேற்க முடியவில்லை. இந்நிலையில், டெல்லி சென்ற இளையராஜா இன்று மாநிலங்களவையில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அப்பாேது பேசிய அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா என்னும் நான், சட்டத்தால் நிறுவப் பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.