பாராமுகத்தில் பாரிவேந்தர்!

ஐஜேகே தலைவரின் அமைதிக்கு என்ன காரணம்?
பாராமுகத்தில் பாரிவேந்தர்!
தொகுதிக்கு வந்த பாரிவேந்தர்

உள்ளாட்சித் தேர்தல், உலுக்கியெடுக்கும் மழைவெள்ளம் என்று ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) குறித்தும், அதன் தலைவரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து குறித்தும் தமிழக அரசியல் களத்தில் பேச்சே இல்லை. இந்த அமைதிக்கு என்ன காரணம்?

சொன்னதும் செய்ததும்

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர், அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும்கூட 'அரணாரை' என்ற கிராமத்தைப் பாரிவேந்தர் தத்தெடுத்தார். ஆனால், அதற்கான தொடக்கவிழாவோடு சரி, அதற்குப் பிறகு அந்தப் பக்கமே போகவில்லை என்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, தொடர்ந்து 6 மாத காலமாக, தொகுதிக்குள் ஐஜேகே சார்பில் பல இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அந்தக் காலகட்டத்தில் திமுக பக்கம் சாய்ந்திருந்த பாரிவேந்தர், உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின்னர் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பாரிவேந்தரும் ஒரு சில தடவை மட்டுமே தொகுதிக்குள் தலையைக் காட்டினார் என்று சொல்லும் தொகுதிவாசிகள், “மீண்டும் 2024-ல் போட்டியிடும் எண்ணமிருந்தால் கடைசி ஒரு வருடத்தில் மீண்டும் இந்தப் பக்கம் வந்துபோக வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

இதுஒருபுறமிருக்க, தேர்தல் சமயத்தில் பாரிவேந்தர் கொடுத்த நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளின் நிலவரம் குறித்து விசாரித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டுவர 3,600 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. அதை விரைவில் கொண்டுவர முயற்சிப்பதாகச் சொல்லியிருந்தார் வேந்தர். பொருளாதார மண்டலமும் உருவாகவில்லை. அந்த நிலமும் விவசாயிகளுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை.

மேம்பாலப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு
மேம்பாலப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு

பெரம்பலூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும்; 24 மணி நேரமும் மக்கள் அங்கு வந்து தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று பாரிவேந்தர் கூறியிருந்தார். ஆனால், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை. ஒரு வருடம் கழித்து திறக்கப்பட்ட அலுவலகம், பாரிவேந்தர் வந்தால் மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. தொகுதியில் நடக்கும் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்தான் தலைவர். ஆனால் அந்தக் கூட்டத்தில் ஒரேயொரு முறை மட்டுமே, அதுவும் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார் பாரிவேந்தர்.

தொகுதிக்குள் எந்தச் சிறப்புத் திட்டத்தையும் பாரிவேந்தரின் பெயரால் பார்க்க முடியவில்லை. “தொகுதி மேம்பாட்டு நிதியில்லையென்றாலும் சொந்த நிதியில் எல்லாவற்றையும் நிறைவேற்றித் தருவேன் என்று சொன்னாரே அது என்னவாயிற்று?” என்று மக்கள் கேட்கிறார்கள். காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றை மதிப்புக்கூட்டவும் பாதுகாத்துவைக்கவும், அதிக விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். விலைகுறைவாக இருக்கும்போது தங்கள் நிறுவன தேவைகளுக்காகத் தானே அதிகவிலை கொடுத்து வாங்கிக்கொள்வதாகவும்கூட சொல்லியிருந்தார். ஆனால், அதன் பின்னர் அதைப் பற்றிப் பேச்சே இல்லை.

பெரம்பலூரிருந்து, துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைக்க பாடுபடுவேன் என்றும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. முன்பெல்லாம் ஐஜேகேவினர் கொடிகளைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். இப்போது அவர்களையும் அதிகம் பார்க்க முடியவில்லை. மேல்மட்டத் தலைவர்களைத் தவிர மற்றவர்களிடம் ஆர்வம் குறைந்துபோய்விட்டது. அதேவேளையில், இலவசப் படிப்புக்காக மாணவர்களைத் தேர்வு செய்வதில் கட்சிக்காரர்களின் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுதான் தற்போது கட்சிக்காரர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். குறிப்பாக, பாரிவேந்தரின் வாக்குறுதிகளில், 300 மாணவர்களுக்கு இலவசக் கல்வி எனும் வாக்குறுதி மட்டுமே நிறைவேறியிருக்கிறது.

குறைந்துபோன செயல்பாடுகள்

பாரிவேந்தரின் உடல்நலம் சரியில்லாததால் அடிக்கடி அவரால் தொகுதிக்குள் வர முடியவில்லை என்றும், மாதாமாதம் ஒரு குழுவை அனுப்பி தொகுதி மக்களுக்கு என்ன தேவையென்பதை அறிந்துகொண்டு அதன்படி செயலாற்றுவதாகவும் ஐஜேகே மேல்மட்ட நிர்வாகிகள் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குழுவும் வெறுமனே பெயரளவுக்குத்தான் வந்துவிட்டுப்போகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

முதுமை காரணமாக யார், என்ன என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்குப் பாரிவேந்தரின் உடல்நிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு முன் தொகுதிக்கு வந்திருந்த பாரிவேந்தர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

திமுகவிடம் பாராமுகம்

திமுக சின்னத்தில் வெற்றி பெற்று எம்பி-யான பாரிவேந்தரால், அந்தக் கட்சியுடன் இணக்கமாக இருக்க முடியவில்லை. அதற்குக் காரணம், இவரது கல்வி நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் இருப்பதுதான். அங்கெல்லாம் மத்திய அரசால் பிரச்சினைகள் வரக்கூடாது என்பதால், கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதுமே மோடியின் அசைவுகளுக்குக் கட்டுப்பட்டே நடக்கிறார் வேந்தர். அதனால்தான், திமுக நடத்தும் எந்த கூட்டங்களுக்கும் இவர் போவதில்லை. தனது மகன் உள்ளிட்ட கட்சியின் மற்ற பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும் வேந்தர், ஸ்டாலின் முதல்வரான பிறகு அவரைச் சந்தித்து வாழ்த்து சொல்ல மட்டும் போனார்.

பல்வேறு காரணங்களால், திமுகவும் இவர்மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மநீம, சமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து திமுகவுக்கான வாக்குகளைச் சிதறடிக்கும் பாஜக திட்டத்துக்கு உதவியது முதல் காரணம். அடுத்த காரணம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதியை எதிர்த்தும் ஐஜேகே வேட்பாளரை நிறுத்தியது. திமுக தயவில் நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ஐஜேகே, அதை மறந்து, முகமது இத்ரிஸ் என்பவரை உதயநிதிக்கு எதிராகக் களமிறக்கியதையும், அவர் பாரிவேந்தர் பெயரை எல்லா இடங்களிலும் சொல்லிச் சொல்லியே வாக்குக் கேட்டதும் திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

சமாளிப்பு வியூகங்கள்

கூட்டணி விஷயத்தில் ரவி பச்சமுத்து தன்னிச்சையாகச் செயல்பட்டதால் அவருக்கும், தனக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதுபோல வெளியில் காட்டிக்கொள்கிறார் பாரிவேந்தர் என்று சிலர் கூறுகிறார்கள். தந்தையின் பேச்சைத் தட்டாதவரான ரவி பச்சமுத்து அப்படியெல்லாம் முடிவெடுக்க வாய்ப்பில்லை என்பது அவர்களின் வாதம். திமுகவைச் சமாதானப்படுத்தவே இப்படி ஒரு சித்தரிப்பு என்று சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பாக எடப்பாடியைச் சந்தித்தது, பாரிவேந்தரின் இல்லம் தேடிவந்து பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தது ஆகியவை வேந்தரின் நிலைப்பாட்டை திமுகவுக்கு உறுதிப்படுத்தின. இதையெல்லாம் திமுக கசப்புடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

இவை தொடர்பாக பாரிவேந்தரிடம் பேசினோம்.

‘’தொகுதி மக்களுக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். அண்மையில்கூட தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்ததுடன், அவர்களின் கோரிக்கைகளைப் பெற்று அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பினேன். கரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறோம்.

உதவி கேட்ட பலருக்கும் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியிருக்கிறோம். இதையெல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ரயில்வே திட்டம் குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். கரோனா காலத்தில் அனைத்தும் முடங்கியிருந்ததால் காய்கறி, வெங்காயம் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய இயலவில்லை. நிலைமை சீரடைந்ததும் அதில் கவனம் செலுத்துவேன்” என்றார் பாரிவேந்தர்.

மேலும், “கட்சியின் செயல்பாடுகளும் நன்றாகவே நடைபெறுகின்றன. அதேபோல திமுகவோடு நல்ல நட்பில்தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்குத்தான் ஆதரவளித்தோம். என் மகன் ரவி பச்சமுத்துவுக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடுமில்லை. எங்களுக்குள் என்ன கருத்து வேற்றுமை வந்துவிடப்போகிறது?” என்றும் சொன்னார்.

எனினும், பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டிக்கொண்டிருப்பது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதா என்பதைப் பாரிவேந்தரும் அவரது பிள்ளையும் தான் முடிவுசெய்ய வேண்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in