தமிழ் அறிஞர்களைப் புறக்கணித்துவிட்டு காசி தமிழ் சங்கமம் நடத்துவதா?:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தமிழ் அறிஞர்களைப் புறக்கணித்துவிட்டு காசி தமிழ் சங்கமம் நடத்துவதா?: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தமிழகத்தில் இருக்கும் முழு பெரும் தமிழ் அறிஞர்கள் எவருக்கும் அழைப்பு கொடுக்கப்படாமல் முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ஏதோ கட்சி நிகழ்ச்சி போல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான பாரம்பரிய தொடர்பை நிறுவும் வகையில் ஒன்றிய அரசு காசி தமிழ் சங்கமும் எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாகச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் முனைவர் பஷீர் அகமது, திருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த நூலை இந்தியப் பிரதமர் வெளியிடுவதாகத் தகவல்கள் வருகின்றன.

நடைமுறையில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நூலின் ஆசிரியர் அழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் வெளியிடுவது தான் பண்பாட்டு மரபாக இருந்து வருகிறது. இந்த மரபைத் தவிர்த்து விட்டு நிகழ்வு நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல.

தமிழகத்தில் இருக்கும் முழு பெரும் தமிழ் அறிஞர்கள் எவருக்கும் அழைப்பு கொடுக்கப்படாமல் முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ஏதோ கட்சி நிகழ்ச்சி போல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஒன்றிய அரசின் நிதியைப் பாஜக தனது சுயலாபத்திற்காக இது போன்ற நிகழ்வுகளை நடத்தி வருவது தவறான வழிகாட்டுதலாகும். தமிழக மாணவர்களை ஏதோ ஆன்மிக சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போல மதரீதியான முன்னெடுப்பைச் செய்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வளத்தையும் கொண்ட தமிழை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்யாமல் அரசியல் செய்யும் பாஜகவின் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in