`5 நாட்களுக்கு தக்காளி வாங்காதீங்க, விலை தானாகவே குறைந்துவிடும்'- சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``தக்காளி விலையை அரசாங்கம் குறைக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 4 அல்லது 5 நாட்கள் தக்காளியை வாங்காமல் இருந்தால் அதன் விலை தானாக குறைந்துவிடும்'' என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘’டெல்டா விவசாயிகள் வாயில் மண்ணை கொட்டியுள்ளனர் காங்கிரஸார். மேகேதாட்டு அணை கட்டுவோம் என்று கூறிய கர்நாடகா காங்கிரஸாரை சம்பிரதாயத்துக்காககூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அங்கு போய் சித்தராமையா, சிவக்குமாருக்கு பாத பூஜை செய்ய சென்றுள்ளார்.

மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம் என தெளிவான முடிவில் பாஜக உறுதியாக இருந்தது. காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் திமுக தான். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கண்டு கொள்ளாமல் தமிழகத்தை அழிப்பதற்காக கர்நாடகாவில் பல அணைகளை கட்ட அனுமதித்தார். அதுபோல் தான் இப்போது மு.க ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்.

தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து, உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது பாஜக வழக்கு தொடரவில்லை. ஏற்கெனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜி, பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.

அமலாக்கத்துறைக்கு வந்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்து திருச்சியா, தூத்துக்குடியா என்பது தெரியவரும். கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது. ஆடி 1-ம் தேதி பொன்முடி வீட்டில் சோதனை. செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் 19 ஆயிரம் கோடி உள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் மீது சோதனை நடத்தவில்லை.

குளித்தலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வரும், அப்போது செந்தில்பாலாஜி சிறைக்குச் செல்வார் என்றார். ஆனால் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் செய்யாததை, அமலாக்கத்துறை செய்துள்ளது. மக்களவைத் தேர்தலை குறிவைத்து பாஜக சோதனை நடத்தவில்லை.

தற்போது வட மாநிலங்களில் வெள்ளம். அந்த மாதிரி இருக்கும் போது விலை ஏறும். 40 ரூபாய்க்கு கீழே விலை குறைந்தால் எல்லா விவசாயிகளிடமும் நாங்களே தக்காளியை வாங்குவோம் என்று அரசாங்கம் சொல்ல வேண்டும். ஏனெனில் விவசாயி கஷ்டப்படும் போது ஒருவரும் பேசுவது இல்லை. தக்காளியை எத்தனை நாட்களுக்கு வைத்து இருக்க முடியும்.

நான் கூட கொய்யா போட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு மேல் வைத்து இருக்க முடியாது. மறுநாள் விற்க முடியாது. அழுகக் கூடிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மக்களே குறைக்கலாம். தக்காளியை வாங்க 4, 5 நாட்கள் போகாதீங்க, தானாக விலை குறையும். அதனால் அரசியல் கட்சிகள் இதை பிரச்சினையாக்குகிறார்கள். ஆனால், விலை குறையும் போது எந்த அரசியல்வாதியாவது குரல் கொடுக்கிறார்களா? காரணம் என்னவென்றால் விவசாயி எண்ணிக்கை கூடவா? நுகர்வோர் எண்ணிக்கை கூடவா? என்று பார்த்துதான் இவர்கள் செய்கிறார்கள்.

தர்மபுரி எம்பி சிவன்- பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக கேட்டபோது, ஈவேரா பெரியாருக்கும் மணியம்மைக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அப்போது அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in