
எங்கள் கட்சி ஆட்சிக்குவந்தால் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்போம் என்ற தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக மகளிர் மோர்ச்சா கூட்டத்தில் கலந்து கொண்டு பண்டி சஞ்சய் குமார் பேசுகையில், “தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அரசு செயல்பாட்டை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும். பாஜக அரசு வந்த பிறகு பெண்களை இழிவாகப் பார்க்கக் கூடிய கும்பல் பயப்பட வேண்டும் . தெலங்கானாவில் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதியை (பிஆர்எஸ்) விட பாஜக மகளிர் அணி பலமாக உள்ளது . பிஆர்எஸ்க்கு மாற்றாக தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுபானம் கட்டுப்படுத்தப்படும். வரும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்” என அவர் பேசினார்.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா தலைமைச் செயலகத்தை இடிப்போம்" என்று கடந்த மாதம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் பண்டி சஞ்சய் குமார். பாஜகவினர் எதையாவது இடிப்பதையே வேலையாக வைத்துள்ளனர் என்று ஏற்கனவே தெலங்கானா மக்கள் பாஜகவினர் மீது விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், பாலியல் குற்றவாளிகளின் வீடுகளை இடிப்போம் என பேசி பண்டி சஞ்சய் குமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.