தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்: நொச்சிக்குப்பம் மீனவர்கள் எச்சரிக்கை!

மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்: நொச்சிக்குப்பம் மீனவர்கள் எச்சரிக்கை!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என சென்னை லூப் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நொச்சிக்குப்பம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி உயர்நீதிமன்றம் தாமாக பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது.

லூப் சாலையில் நடைபாதையில் சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன என்றும் பொதுசாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ம் தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த வாரம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன் வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். 

300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் மீன்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மீன் கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது என நீதிபதிகள் குற்றம்சாட்டினர். சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in