
"தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பல இடைத்தேர்தல் நடந்து இருக்கிறது. இடைத்தேர்தலில் இப்படிப்பட்ட விதி மீறல்கள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள், திமுகவினர் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திரிபுரா, நாகாலாந்து மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரைக்கும் ஜனநாயகமா? பணநாயகமா?என்று பார்க்கின்ற பொழுது பணநாயகம் தான் இன்றைய தினம் வெற்றி பெற்று இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை வாக்காளர்களுக்கு தினந்தோறும் திமுகவினர் பணமழை பொழிந்தனர்.
30 திமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு 25 மாதங்கள் திமுக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் பணத்தை தண்ணீர் போல் வாரி இறைத்துக்கொண்டு ஜனநாயக படுகொலை செய்து, தேர்தல் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து உள்ளார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை 120 இடங்களில் டெண்டு போட்டு ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல வாக்காளப் பெருமக்களை அடைத்து வைத்து அவர்களுக்கு அசைவ உணவு கொடுத்து தினந்தோறும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து மற்றும் 5000 மதிப்புள்ள பொருள்களை வழங்கி வாக்காளர்களை ஏமாற்றி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இந்த தேர்தல் விதிமுறை குறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தோம். மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தோம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தோம். ஆனால் விதிமுறை மீறிய திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகளை சுட்டிக்காட்டி நாங்கள் வாக்கு கேட்டோம். ஆனால் 25 மாதங்களில் திமுக அமைச்சர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் முதலீடு செய்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பல இடைத்தேர்தல் நடந்து இருக்கிறது. இடைத்தேர்தலில் இப்படிப்பட்ட விதி மீறல்கள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள், திமுகவினர் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்" என்றார்.