
ரயில்வே நிலமோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நோய்வாய்ப்பட்ட தனது தந்தை தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக தெரிவித்த அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, அவருக்கு ஏதாவது நடந்தால் "யாரையும் விடமாட்டேன்" என்று எச்சரித்துள்ளார்.
ரயில்வே நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது தொடர்பாக, அவரது இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா, அவர் துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை என்று ட்வீட் செய்துள்ளார். அவர், "இதெல்லாம் ஞாபகம் இருக்கும். காலம் ரொம்ப சக்தி வாய்ந்தது. லாலு பிரசாத் யாதவ் இப்போதும் டெல்லியில் அதிகாரத்தின் இருக்கையை அசைக்க வல்லவர். சகிப்புத்தன்மையின் வரம்புகள் இப்போது சோதிக்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ரோகிணி ஆச்சார்யா தனது சிறுநீரகங்களில் ஒன்றை லாலு பிரசாத் யாதவுக்கு தானமாக வழங்கினார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கடந்த மாதம் நாடு திரும்பிய லாலு பிரசாத் டெல்லியில் தனது மகளும், எம்பியுமான மிசா பார்தியின் வீட்டில் தங்கியுள்ளார்.
ரயில்வே நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகள்கள் மிசா, ஹேமா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நேற்று பாட்னா இல்லத்தில் ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மார்ச் 15 அன்று, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.