"டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சிறையிலடைக்கப்பட்டால் அங்கேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வோம்" என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2021-ல் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் ராவத் ஆகியோரை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் தற்போது மூன்றாவது நபராக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தபோதும், `இந்த சம்மன் பா.ஜ.கவின் பேரால் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என அமலாத்துறைக்குக் கடிதம் அனுப்பி, அதனைப் புறக்கணித்தார் கேஜ்ரிவால். மேலும், `கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால் ஆட்சியும் சிறையிலிருந்துதான் நடக்கும்' என ஆம் ஆத்மி கூறிவந்தது. இத்தகைய சூழலில், ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால் சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி கேட்போம் என ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறியிருக்கிறார். கேஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக பேசிய அமைச்சர் அதிஷி, ``நாங்கள் மக்களிடம் செல்கையில், ஆம் ஆத்மிக்கும் கேஜ்ரிவாலுக்கும் அட்டூழியங்கள் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அதனால்தான் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றாலும், அவரே முதல்வராகத் தொடர வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏக்களும் கேஜ்ரிவாலிடம் கோரிக்கை வைத்தனர்.
கேஜ்ரிவாலை டெல்லி மக்கள் முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவரே முதல்வராக நீடிக்க வேண்டும். அவர் சிறையிலடைக்கப்பட்டால், சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வோம்" என்று கூறினார்.