நான்தான் அதிமுக என்றால் ஓபிஎஸ் போகவேண்டிய இடம் நீதிமன்றமல்ல, தேர்தல் ஆணையம்: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

நான்தான் அதிமுக என்றால் ஓபிஎஸ் போகவேண்டிய இடம் நீதிமன்றமல்ல, தேர்தல் ஆணையம்: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

நான்தான் அதிமுக என ஓபிஎஸ் நீதிமன்றங்களில் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் போக வேண்டிய இடம் தேர்தல் ஆணையம் என்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அதிமுக தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறினார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி - ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. ஓபிஎஸ் தரப்பை முதலில் வாதாட அனுமதித்த நீதிபதிகள் நேற்றுமுதல் அதிமுக தரப்பு வாதங்களைக் கேட்டு வந்தனர்.அரிமா சுந்தரம் நேற்று வாதிட்டதை தொடர்ந்து இன்று அதிமுக தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் முதலில் ஆஜராகி வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில்," பொதுக்குழு உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை மனுதாரரே மறுக்கவில்லை. தனி நீதிபதி அளித்த எல்லை தாண்டிய ஸ்டேட்டஸ்கோ உத்தரவால் கட்சி செயல்பட இயலா நிலை வந்தது. ஒன்றரை கோடி தொண்டர்களின் வாக்குகளை தேர்தல் மூலம் ஓபிஎஸ் பெற்றார் என்பதே தவறான வாதம். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் இணைந்தே செயல்பட்டார்கள் எனில் வைரமுத்து வழக்கில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் எப்படி தன்னை மட்டும் தனி வாதியாக காட்ட இயலும்? சிவில் வழக்கில் ஒருவரே எப்படி வாதியாகவும் பிரதிவாதியாகவும் இருக்க இயலும்? " என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், " நோட்டீஸ் என்பது எழுத்துப்பூர்வமானதாக இருக்கவேண்டும் என பொருள் கொள்ள வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 23-ம் தேதி அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது மனுதாரரும் அங்கு இருந்துள்ளார். மேலும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு நோட்டீஸ் வரவில்லை என எவரும் புகார் அளிக்கவில்லை. எனவே, நோட்டீஸ் குறித்த மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது" என்று கூறினார்.

ஜூன் 23 அவைத்தலைவர்தான் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கான அறிவிப்பைவெளியிட்டார். அவர் யார்? இணை ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து அவைத்தலைவராக அவரை நியமித்ததே இதே மனுதாரர் தானே? நான்தான் அதிமுக என ஓபிஎஸ் நீதிமன்றங்களில் கூறிக் கொண்டிருக்கிறார்.அவர் போக வேண்டிய இடம் தேர்தல் ஆணையம் ஆகும். ஆனாலும், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை செல்லாததற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகள் அவரிடம் இல்லை என்பதே.

பதவியே காலாவதியான பின்பு தான் அந்த பதவியில் இருப்பதாக கூற முடியாது.கிராம நிர்வாக அலுவலர் பதவியை தமிழக அரசு ரத்து செய்த வழக்கில் அவ்வாறு ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே. அந்த பதவிக்குரிய காலம் வரை தாங்கள் பதவியிலிருப்போம் என எவரும் உரிமை கோர முடியாது என 1982- ம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவ் வழக்கிற்கும் பொருந்தும்" என்று வைத்தியநாதன் வாதாடினார்.

ஓபிஎஸ் எதனால் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை வைத்தியநாதன் தனது வாதத்தில் விவரித்தபோது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஓபிஎஸ் தான் நீக்கப்பட்டதை எதிர்த்து அவரே வழக்கு தொடராத நிலையில் இந்த நீதிமன்றத்தில் அவரது நீக்கம் தொடர்பாக வாதாட வேண்டாம்" என கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், " பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த காலத்திலும் கூட கட்சியின் எல்லா முடிவுகளுக்கும் பொதுக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற விதி இருந்தது. காரணம் பொதுக்குழுவே அதிமுகவின் உயர் அமைப்பு ஆகும்.

இருவரும் இணைந்து ஒற்றை ஓட்டு மூலம் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கு பொதுக்குழுவின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஏனெனில், பொதுக்குழுவே உயர் அதிகாரம் கொண்டதாகும். ஆனால். பொதுக்குழுவின் ஒப்புதலை அவ்வாறு பெறவில்லை என்பதை நீதிமன்றம் கவனிக்க வேண்டும். பொதுக்குழுவின் முடிவே இறுதியானதாகும் என்பதே அதிமுக சட்டம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த பொதுச் செயலாளர் என்ற ஒரு பதவிக்கு இருவரையுமே நியமிக்க முடியாது என்பதால் இருவரும் பதவி வகிக்க வசதியாகவே ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு தீர்மானத்தால் 2017-ல் கொண்டு உருவாக்கப்பட்டது. இரட்டைத் தலைமையால் தற்போது கட்சி நடவடிக்கைகளில் முடிவெடுப்பதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் அன்ற நோக்கில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வர கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டது.

கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் தாக்கிச் சூறையாடாயதை தொடர்ந்து அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஓபிஎஸ்−இபிஎஸ் இருவரும் தலைமை அலுவலகத்துக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்துக்கு சென்றனர். சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து கட்சி அலுவலகத்தை இபிஎஸ்சிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்று உறுதிபடுத்தி உள்ளது" என முகுல் ரோஹத்கி வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்," ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒற்றை வாக்கு முறையில் வாக்கு பெட்டி வைத்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா?" என முகுல் ரோஹத்கியிடம் கேட்டபோது, " எதிர்த்து எவரும் போட்டியிடாததால் இருவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்து அவர்கள் தேர்ந்தெடுக்கபடவில்லை" என பதிலளித்தார்.

மேலும் அஜெண்டாவில் இல்லாத நிலையில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது ஏன் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, " உச்ச நீதிமன்ற உத்தரவுபடியும் தனி நீதிபதியின் உத்தரவுபடியும்தான் ஜூலை 11- ம் தேதி பொதுக்குழு நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் ஓபிஎஸ் ஏன் பொதுக்குழுவுக்கு செல்லவில்லை? அதிமுக அலுவலகத்தைக் கும்பலாகச் சென்று தாக்கிச் சூறையாடியதால் பொதுக்குழு உறுப்பினர்கள் கொந்தளித்து ஓபிஎஸ்சை நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்ததால்தான் பொதுக்குழு அவரை நீக்கியது" என்று கூறினார்.

இதன் பின், ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ரஞ்சித்குமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் நீதிபதிகளிடம் அதிமுக தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து வாதாடினர். ரஞ்சித்குமார் தனது வாதத்தின்போது," இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால்தான் கட்சி முடங்கும் நிலை வந்தது" எனக் கூறியபோது, " தனி நீதிபதியின் தீர்ப்பால்தான் பிரச்சினை வலுத்தது. இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டுங்கள் என தனி நீதிபதி சொல்கிறார். அது எப்படி இருவருக்கும் பிரச்சினை வலுத்த பின் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவார்கள்?" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் திங்களுக்குள் இரு தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in