திமுக பேசினால் தீவிரவாதம்... பாஜக பேசினால் அரசியலா?

பிடித்து எரியும் பிரிவினை சர்ச்சை!
திமுக பேசினால் தீவிரவாதம்... பாஜக பேசினால் அரசியலா?

அதிமுகவில் ஒரு பக்கம் அதிகாரப் போட்டிக்கான யுத்தம் உச்சமடைந்து வரும் நிலையில், மாநில பிரிவினை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு கடந்த 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சாட்சிக்கு வைத்துக் கொண்டு பேசிய ஆ.ராசா, “ ’பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திரத் தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு’ என்று தந்தை பெரியார் சொன்னார். ஆனால் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம்; இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அமித் ஷாவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன். உங்களைப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதல்வர். எங்களைப் பெரியார் வழிக்குத் தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்" என்றார்.

எச்.ராஜா ட்விட்
எச்.ராஜா ட்விட்

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும்’ என ட்விட் செய்தார். பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன், “நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று ஆ.ராசாவை அறிக்கையால் எச்சரித்தார். “ஆ.ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று சூடேற்றினார் சுப்பிரமணியன் சுவாமி.

வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்.

தனித் தமிழ்நாடு கோரிக்கை என்பது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே வலியுறுத்தப்படுகிறது. 2018-ல் தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், “தெற்கு மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன்” என்று வெளிப்படையாகவே சொன்னார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மாநிலங்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவது தான் தனிநாடு கோரிக்கைக்கான முழக்கமாக மாறி வருவதாக அரசியலர்கள் கருகிறார்கள். தனிநாடு கோரிக்கையை திமுக வலியுறுத்துவது ஒருபுறமிருக்க, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பாமக நிறுவனர் ராமதாஸ், ‘சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும். கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும்’ என்று முகநூலில் பதிவிட்டார்.

 ராமதாஸ்
ராமதாஸ்

’தமிழகத்தில் மாநிலச் சீரமைப்பு செய்து புதிய மாநிலமாக அதாவது கொங்கு நாடாக உருவாக்க வேண்டும்’ என கோவை வடக்கு மாவட்ட பாஜக தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆத்திரப்படுகிறது பாஜக.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

தனித் தமிழ்நாடு குறித்து திமுக பேசினால் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறதே என்ற கேள்வியுடன் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

“ஆ.ராசாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, அயல்நாட்டு உறவு கெடுவது - இதையெல்லாம் செய்தால் தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் நுபுர் சர்மாவை தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.


நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, 'பிரிவினைக்கான கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது' என்று அறிஞர் அண்ணா சொன்னார். ‘அதை மாற்றுவதற்கான முயற்சி இல்லாமல் இந்த சட்டங்கள் எதுவும் செய்து விடாது' என்றும் பேசினார். இப்போதும் அதே சிந்தனை வருவது போன்று தான் பாஜக செயல்பாடுகள் உள்ளன" என்று சொன்னார் மணி.

தொடர்ந்து பேசிய அவர், "1955-ல் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில், 'இந்தியா ஒன்றாக இருக்க முடியாது. பெரும்பான்மை என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்தியைப் பற்றி யோசனை செய்யுங்கள். இந்தி என்பது ஒரு ஓட்டில் வந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் தலைநகரை டெல்லியில் வைத்திருப்பது நிச்சயமாக நமக்கு தொடர்பில்லை என்ற எண்ணத்தை தென்னிந்தியர்களுக்கு உருவாக்கிவிடும். எனவே, அதற்கு தென்னிந்தியாவிலும் ஒரு தலைநகரை இருக்க வேண்டும்' என்று எழுதினார். இதே நூலில், ராஜாஜி கூறிய கருத்துகளையும் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.


அதில்,' தென் மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு ஃபெடரேஷனும், வட மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு ஃபெடரேஷனும் வைத்துக்கொள்ள வேண்டும். அவை இரண்டுக்கும் சம வாக்குரிமை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவில் பிரிவினை வருவதற்கு நீண்ட காலம் ஆகாது' என்று ராஜாஜி கூறியதாக அம்பேத்கர் பதிவிட்டுள்ளார். அந்த பிரிவினை வேலையை பாஜக தான் செய்கிறது. எனவே தான், எங்கள் கலாச்சாரத்தை, மொழியை எல்லோரும் பின்பற்றுங்கள் என்கிறது; மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மாநில அதிகாரத்தில் இருந்து மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூட இந்தியா முழுமைக்கும் ஒரே பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிறது. கல்வியில் ஒவ்வொரு மாநிலமும் வேறுபடுகிறது. முனைவர் பட்டத்திற்கான தலைப்புகளை முடிவு செய்யும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்கிறது. இப்படி எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் கீழடி நாகரிகத்தை ஆய்வு செய்ய அனுமதி தருவார்களா? பாஜக ஆட்சிக்கு வந்த பின் மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வருகிறது.

1952-ம் ஆண்டு தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே ஜனசங்கம், மாகாணத்தை ஒத்துக்கொள்ளவில்லை. மாநிலங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் அதையே தான் பாஜக சொல்கிறது. 'இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் என்ற பிரிப்புகளை நீக்கிவிட்டு 200 ஜன்பத்களாக உருவாக்குவோம்' என்கிறார்கள். இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் கொண்டு சென்றால் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேலையே இருக்காது. இதனால் தான் மாநிலத்துக்கு மாநிலம் தனி நாடென்ற சுதந்திரக் குரல்கள் எதிரொலிக்கின்றன” என்றார்.

தனி நாடு கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்ற தொனியில் ஆ.ராசா பேசிய பேச்சுக்கு பாஜகவினர் இத்தனை ஆத்திரப்படுகிறார்கள். ஆனால், “தமிழகத்தை இரண்டாகப் பிரிப்போம். இரண்டிலும் நாங்களே ஆட்சிக்கு வருவோம்” என்று பாஜகவின் சட்டமன்றக் குழு தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்று திமுகவினர் கேட்கும் கேள்விக்குத்தான் பதில் சொல்ல அங்கே ஆளில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in