
`ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும்'' என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையைத் தனியார் மூலம் செயல்படுத்துவோம் என அண்ணாமலை கூறுகிறார். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட உள்ளது. இது அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆலயங்கள் தனியாரிடம் இருந்தால் அது ஒரு சாரருக்கான ஆலயம் ஆகிவிடும். இவ்வளவு ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதுதான் சரியானதும்கூட! ஆலயம் அனைத்துத் தரப்பினரும் வழிபடும் இடமாக இருக்கவேண்டும் என்பதால் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அது தெரியாதவர்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட்டே கிடைக்காது. அதனால் தான் அங்கு போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என அண்ணாமலையே பேசியிருக்கிறார். பி.பி.சி ஆவணப்படத்தை பாஜக ஜனநாயகத்தை நம்பும் இயக்கமென்றால் வெளியிட வைத்து, ஆரோக்கியமான விவாதத்தையே ஏற்படுத்த வேண்டும். அதை முடக்குகிறார்கள். பாஜகவின் ஜனநாயகம் அவ்வளவுதான்!” என்றார்.