`என் அருமை நண்பர் பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்'- நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை

`என் அருமை நண்பர் பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்'- நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை

"என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து விஜயகாந்த்துக்கு 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து தேமுதிக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்த்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடியுந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில், "எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணன் சுதீஷிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்தேன். கேப்டன் ஆண்டவனின் ஆசிர்வாதத்தோடு, மக்களுடைய அன்போடு பூரணமாக நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in