இதற்கு உடன்பட்டால் மட்டுமே இனி ரஜினியை ஆதரிப்பேன்!

தமிழருவி மணியனின் புதிய நிபந்தனை
தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்M_VEDHAN

இதுவரை தான் நடத்திவந்த காந்திய மக்கள் இயக்கத்தை 'காமராஜர் மக்கள் இயக்கம்' என மாற்றியிருக்கும் தமிழருவி மணியன், “அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக தான் எடுத்த முடிவு இமாலய தவறு” என்று பிரகடனம் செய்திருக்கிறார். அவர் தூக்கிச் சுமந்த ரஜினிகாந்தோ, “ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அரசியலும் பேசினேன்” என்று பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார். இப்படியான சூழலில் தமிழருவி மணியனிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

B_Velankanni Raj

காந்திய மக்கள் இயக்கத்தை காமராஜர் மக்கள் இயக்கம் என்று மாற்றியது ஏன்?

13 ஆண்டுகள் காந்திய மக்கள் இயக்கத்தை நடத்தியிருக்கிறேன். அந்தப் பெயரில் பரவலாக விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறோம். அனைத்து மக்களும் காந்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்திலேயே இயக்கம் உருவாக்கப்பட்டது. உலகிற்கே அரசியல் இலக்கணத்தை காந்தியம் வகுத்துக் கொடுத்துள்ளது. தனி வாழ்வில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, வார்த்தைகளில் வாய்மை இவைதான் நல் அரசியல்வாதியின் தகுதிகள். இந்த மேலான வாழ்வியல் இலக்கணங்களை கொண்டுபோய் சேர்க்க காந்திய மக்கள் இயக்கம் புறப்பட்டதே தவிர ஆட்சிக்கட்டிலை நோக்கி நடக்க அல்ல.

இந்த 13 ஆண்டுகளில் ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். காந்தியைவிட இந்த மண்ணுக்கு நெருக்கமானவர் காமராஜர். எனவே, காமராஜரை மையமாகவைத்து அரசியல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். காமராஜரிடம் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கி, 50 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என போராடி வருபவன் நான். இதனால் கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம் என மாற்றவேண்டும் என பொதுக்குழுவில் அத்தனைபேரும் வலியுறுத்தினார்கள். ஜனநாயக முறையில் அதை அங்கீகரித்து பெயரை மாற்றியிருக்கிறேன். கட்சியின் பெயர்மட்டும்தான் மாறியுள்ளது. எங்கள் பாதையும் பயணமும் மாறவே இல்லை.

அரசியலை விட்டு முற்றாக விலகுவதாக அறிவித்தீர்கள்... இப்போது மீண்டும் அரசியல் பாதைக்குத் திரும்ப என்ன காரணம்?

மக்கள் மீதும் இந்த மண்ணின் மீதும் இருக்கும் எல்லையற்ற நேசம்தான் காரணம். இதையெல்லாம் சுமந்துகொண்டு எது நடந்தால் நமக்கென்ன என ஒதுங்கியிருந்து மெளனப் பார்வையாளராக இறக்கும் வரை இருந்துவிடமுடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். 53 ஆண்டுகள் மக்களுக்காகத்தான் அரசியல் நடத்தியிருக்கிறேன். என் தனிப்பட்ட நலனுக்காக ஒருநாள்கூட செயல்பட்டதில்லை. என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தால் காமராஜரின் மறைவுக்குப் பின்பு காங்கிரசிலேயே இருந்திருக்கலாம். ஜனதாவுக்கு சென்றிருக்க வேண்டாம். ஜனதா தேய்மானம் அடைந்தபோது திராவிடக் கட்சிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தால் என் உயரம் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

இப்பொழுதும்கூட பாஜகவில் நான் இணைவேனா என எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அந்தப்பக்கம் பார்வையைச் செலுத்தினால் அதற்கான உயரமும் இருக்கும். ஆனால், இதற்காகவெல்லாம் நான் அரசியல்செய்ய வரவில்லை. என்னைப் பொறுத்தவரை நேர்மை, உண்மை சார்ந்து ஒரு இயக்கமாக இருக்கவேண்டும். ஊழலற்ற ஒரு ஆட்சி தமிழகத்தில் உருப்பெற வேண்டும். மீண்டும் இந்த மண்ணில் காமராஜர் ஆட்சி வேண்டும் என்னும் ஒற்றைக் குறிக்கோளோடு தான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். ஒருதூய ஆட்சியை என்னுடைய வாழ்கைப் பயணம் முடிவதற்குள்ளாவது இந்த மண்ணில் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை.

உங்கள் நண்பர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தபோது, அரசியல் பேசினேன் என்கிறாரே?

ரஜினிகாந்த் என்னிடம் நான் கட்சி தொடங்கப்போவது இல்லை. தேர்தல் களத்திற்கு வரப்போவதில்லை என எப்போது சொன்னாரோ, அன்றிலிருந்து இன்றுவரை நண்பர்களாக மட்டுமே இருக்கிறோம். என்னிடம் அவர் அரசியல் பேசுவதில்லை. நான் அவரிடம் மறந்தும் அரசியல் பேசுவதில்லை. அதனால் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.

ரஜினியால் உங்கள் அரசியல் பயணத்தில் மூன்று ஆண்டுகளை இழந்துவிட்டதாக வருத்தப்படுகிறீர்களா?

எனக்கு 53 ஆண்டுகளும் வீணாகத்தானே போனது. காமராஜரின் காலடியில் அரசியல் தொடங்கினேன். அவரது மறைவுக்குப் பின்பு ஜனதாவில் என் இளமையை இழந்தேன். 1980-ல் எம்ஜிஆர் என் பேச்சைக் கேட்டுவிட்டு ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துவர ஆள் அனுப்பினார். அப்போதும் நான் செல்ல மறுத்தேன். என்னை எப்போதும் நான் முன்னிறுத்தியது இல்லை. மக்கள் நலன் சார்ந்து இயங்குவது ஒன்றே நான் காமராஜரிடம் கற்றப்பாடம். அதனால் வெற்றி, தோல்வி குறித்து எனக்குக் கவலை இல்லை.

முதலில் வைகோவோடு இணைந்து செயல்பட்டேன். அவர், என் நினைப்புக்கு ஏற்ப இல்லாததால் வலியோடுதான் பிரிந்தேன். சிஸ்டம் சரியில்லை என நான் 50 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். அதே குரலை ரஜினியும் சொன்னார். அதனால் அவரோடு இணைந்து பயணித்தேன். சிஸ்டத்தை மாற்ற நிறைய முயன்றேன். வலியும் வேதனையுமாகத்தான் பிரியவேண்டி வந்தது.

வைகோ, ரஜினி... இனி தமிழருவியின் அடுத்த முதல்வர் சாய்ஸ் யார்?

இவர் முதல்வர், அவர் முதல்வர் என ஒருபோதும் இனி சொல்லமாட்டேன். உண்மையான காமராஜர் ஆட்சி வேண்டுமென்றால் என்னை முதல்வராக்குங்கள் எனக் கேட்கிறேன். நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் ஞானத்தெளிவு இது. ஆனால், அப்படியெல்லாம் தமிழினம் என்னை முதல்வராக்கிவிடாது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

காலம் கடந்த அரசியல் தெளிவுபோல் தோன்றுகிறதே... இளமையில் அல்லவா இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்?

காந்திய மக்கள் இயக்கத்தை தொடங்கும்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் என்னை வந்து சந்தித்தனர். “உங்கள் மீது அன்பும், பாசமும் இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சியை விட்டும், திட்டக்குழுவில் இருந்தும் விலகினீர்கள். உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. நீங்கள் காந்தி பெயரை வைப்பதற்குப் பதிலாக தமிழ் இனம், மொழி சார்ந்து பெயர் வைத்தால் அத்தனை இளைஞர்களும் பின்னால் நிற்போம்” என்றனர்.

காந்தியம் என்பது உன்னதமான வாழ்வியல் முறை. அந்த உன்னதத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்னும் தாகத்தோடும், தவிப்போடும்தான் இயக்கத்தை தொடங்கினேன். அரசியல் ஆதாயம் தேடும் ஆசை இல்லை. ஆனால், காந்தி பெயரை ஏற்காமல் இளைஞர்கள் போய்விட்டனர்.

கட்சி, ஆட்சியில் தலைவராக இருப்பவரிடம் நேர்மை, எளிமை, ஏழ்மை என மூன்றும் இருக்கவேண்டும் என்பதுதான் காந்தியக் கொள்கை. காமராஜர் இறந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும், அவர் ஆட்சிதான் இந்த மூன்று கொள்கையோடும் இயைந்ததாக இருக்கிறது. இந்த மூன்றும் என்னிடம் இருக்கிறது என இன்றைய இளைஞர்களுக்கு செய்தியாகச் சொல்கிறேன். அவ்வளவுதான். அதற்கு காலதாமதம் பொருட்டல்ல.

மக்களவைத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறீர்கள்?

நாங்கள் உடனடியாக தேர்தல் களம்பற்றி கவலைப்படவில்லை. அரசியல் என்பது மக்கள் சேவைக்கானதுதான். தொடர்ந்து அதைச் செய்திருக்கிறோம். மதுக்கடைகளை மூடக் கேட்டு நாங்கள் தமிழகம் முழுவதும் 18 லட்சம் மாணவ - மாணவிகளைச் சந்தித்து கையெழுத்து வாங்கி அன்றைய அமைச்சர் நந்தம் விசுவநாதனிடம் கொடுத்தோம். “கையைப் பிடித்து இழுத்து யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. மக்களை குடிக்க வேண்டாம் என பரப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்” என அவர் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தார். எங்களைப் பொறுத்தவரை மக்கள் சேவையே பிரதானம். அரசியல் கணக்கீடுகளுக்காகக் காத்திருப்பதில்லை.

உறுப்பினர் சேர்க்கைக்கு மிஸ்டு கால் கொடுக்கும் வசதியைச் செய்திருக்கிறீர்கள். இதைத்தானே பாஜகவும் செய்தது?

இது அதைப் போன்றது இல்லை. இங்கே உறுப்பினர் சேர்க்கையின் பெயர் விவரங்கள் உண்மையான அளவே சொல்லப்படும். நான் இத்தனை லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் எனச் சொல்பவனும் அல்ல. எங்களுடைய இணைய பக்கத்திலேயே ஒவ்வொரு உறுப்பினரின் பெயர், முகவரி சகிதம் போட்டுள்ளோம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் அவ்வளவுதான்.

சிஸ்டம் சரியில்லை என்கிறீர்கள்... மத்தியிலா? மாநிலத்திலா?

எங்குமே சரியில்லைதான். அதிகார குவியல் மிகப்பெரிய ஆபத்து. மத்தியில் இருக்கும் குவியல் மாநிலத்திற்கு பேராபத்து. மாநிலம், அந்த அதிகாரத்தை ஊராட்சிக்கு கொடுத்திருக்கிறதா? மொத்தத்தில் எங்குமே சிஸ்டம் சரியில்லை.

ஜனநாயகத்தில் பண நாயகமே ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலச்சூழலில் தமிழருவி மணியனுக்கான இடம் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

2016-ம் ஆண்டு 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து களத்தில் நின்றோம். பதிவுசெய்யப்பட்ட கட்சி என்பதால் அனைவருக்கும் விசில் சின்னம் கிடைத்தது. வேட்பாளர்களை 6 மாதம் முன்பே அறிவித்தோம். அவர்கள் மீது மக்கள் குறைசொன்னால் வேட்பாளரையே மாற்றுவோம் என அறிவித்தோம். ஊட்டி பேருந்து நிலையத்தில் எங்கள் வேட்பாளரை ஆதரித்துப் பேசினேன். 50 வயதைக் கடந்த நான்கு பெரிய மனிதர்கள், “நீங்கள் அர்த்தமாக பேசினீர்கள். ஆனால், ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?” எனக்கேட்டார்கள். நான் நொறுங்கிப் போய்விட்டேன். ஆக, மாற்றம் மக்களின் மனங்களில்தான் நிகழவேண்டும். அதற்காகவே காத்திருக்கிறேன்.

அதிமுகவை ஒருங்கிணைத்து, பாஜக, அதிமுக கூட்டணியோடு ரஜினி மீண்டும் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?

ரஜினியோடு இணைந்து மாற்று அரசியலை முன்னெடுத்தபோது, பாஜகவோடு இணைந்து தேர்தல் களத்தைச் சந்திக்கும் சூழலை ஒருபோதும் நான் எடுக்கவில்லை. 234 தொகுதியிலும் நாம் தான் நிற்கிறோம் என்பதில் உறுதியாகவே இருந்தோம். பாஜக, அதிமுக, திமுகவோடு கூட்டணி இல்லை என்பதை நான் ரஜினிகாந்திடம் முதலிலேயே வலியுறுத்தினேன். அந்தத் தெளிவோடுதான் அவரும் கடைசிவரை இருந்தார். அதனால்தான் ரஜினி, “என்மீது காவிச்சாயம் பூசமுடியாது” எனப் பேட்டியே கொடுத்தார்.

ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை. அவர் என்னிடம் அதை மிக உறுதியாகச் சொன்னார். நான்கூட வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டு, வந்துவிட்டேன் அல்லவா? அதுபோல் ரஜினி வருவதாக இருந்தால், அதற்காகவே தமிழருவி மணியன் அவருடன் போய் நிற்கமாட்டார்.

அதிமுக, திமுக, பாஜகவை அவர் புறந்தள்ள வேண்டும். காங்கிரஸ் உடன்கூட கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். மதச்சாயம், மதவாதத்தை முன்னெடுக்கும் கட்சிகளுடனோ, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கட்சிகளுடனோ அணிசேரக் கூடாது. இந்த நிபந்தனைக்கு உடன்பட்டால் மட்டுமே இனி ரஜினியை ஆதரிப்பேன். திமுக, அதிமுக, பாஜக இல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து ரஜினி தலைமையில் கூட்டணி அமைத்தால் நாங்கள் ஆதரிப்போம். நாங்களாக வளர்வது ஒருநாளும் நடக்காது என்பதையும் அறிந்திருக்கி்றோம். இரு திராவிடக் கட்சிகளும், மதவாதம் பேசும் பாஜகவும் எங்களுக்கு வேண்டாம் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. அதை சேதாரம் இல்லாமல் காப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in