`திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்'

சுயசரிதை நூல் வெளியிட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
`திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்'

"சமூகநீதியின் மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை அரசியல் அதிகாரம் பெற்ற சமூகமாக ஆக்குவது, அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்படவேண்டும். இவைதான் திராவிட மாடல் கோட்பாடு. திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தனது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவுக்குப் பிறகு கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளின் தலைவனாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். 'கலைஞர் அவர்களைப் போல எனக்கு எழுதத் தெரியாது. அவரைப் போல பேசத் தெரியாது. ஆனால் அனைத்தையும் முயன்று பார்ப்பேன்" என்று நான் அப்போது குறிப்பிட்டேன். அப்படி நான் செய்த முயற்சிதான் இந்தப் புத்தகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற பெருமையால் அல்ல, இந்தத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற கர்வத்தால் அல்ல, எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 'உங்களில் ஒருவன்' என்றே பெயர் சூட்டி இருக்கிறேன்.

நீங்கள் அனைவரும் உங்களை விட உயரமான இடத்தில் கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும், நான் உங்களில் ஒருவன் தான். முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாக என்னை கழகத்தவர்கள் முதன்முதலாக நினைத்தபோதும், உங்களில் ஒருவன்தான் நான் என்று கழகத்தவர்களோடு அவர்களில் ஒருவனாக நான் செயல்பட்டேன். இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்புக்கு வந்தபோதும், உங்களில் ஒருவனாகத்தான் நான் செயல்பட்டேன்!. பொருளாளராக ஆனபோதும், அப்படித்தான் செயல்பட்டேன்! அமைச்சர் ஆனபோதும், துணை முதலமைச்சர் ஆனபோதும் அப்படித்தான் செயல்பட்டேன்! கழகத்தின் தலைவராக ஆனபோதும், இப்போது முதலமைச்சராக ஆனபிறகும், அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன். எனது வாழ்நாள் முழுக்க உங்களில் ஒருவனாகத்தான் நான் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

எனக்கு திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும் சொற்கள், பேரறிஞர் அண்ணா சொன்ன -'மக்களிடம் செல்! மக்களோடு வாழ்" என்பதுதான். சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டபோது, பதவி என்று நான் எழுதிய இடத்தில் பொறுப்பு என்று மாற்றி எழுதித் தலைவர் கலைஞர் செய்த திருத்தம்தான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பெரிய பாடம் ஆகும். அந்த பொறுப்பில் இருந்து எத்தனை உயர் பொறுப்புக்கு நான் வந்தாலும் 'உங்களில் ஒருவன் தான் நான்! உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்! இதனை வாசிப்பதன் மூலமாக உங்களில் ஒருவனாக நான் எப்படி முளைத்தேன் என்பதை முதன்முதலாக நீங்கல் அறியப் போகிறீர்கள். எனது இருபத்து மூன்று வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தப் புத்தகம்.

1953ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். அதாவது நாளை எனது பிறந்தநாள். இன்றைய தினம் பிப்ரவரி 28. எனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னராக, இந்தப் புத்தகம் பிறக்கிறது. 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தின் படி நான் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்றுச் சுவடுகள்தான் இந்தப் புத்தகம். எந்தவொரு மனிதனுக்கும் முதல் 25 வயது வரையிலான காலக்கட்டம் என்பது மிகமிக முக்கியமானது. அவரது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது அந்த வயதுதான். அவன் என்னவாக ஆகப் போகிறான் என்பதைத் தீர்மானிப்பதும் அந்த வயதுதான். எட்டு எட்டாக மனித வாழ்க்கையைப் பிரித்து எழுதிய வைரமுத்து அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். ஆமாம், நான் அரசியல் பயிராகத்தான் வளர்ந்தேன் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

1996-ஆம் ஆண்டு சென்னை மேயராக நான் பொறுப்பேற்றபோது பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டார். 'அரசியலுக்கு வராமல் போயிருந்தால் நீங்கள் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டார். 'நான் அரசியலில்தான் இருந்திருப்பேன்' என்று சொன்னேன். அரசியல் என்பது எனது ரத்தத்தில் இருந்தது. பள்ளிக்குச் சென்றாலும் - கல்லூரிக்குச் சென்றாலும் என் மனதில், மூளையில், சிந்தனையில், செயலில் - கழகம் - கழகம் - கழகம் என்பது தான் இருந்தது என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம். பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால் - அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால் - அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் நான். அத்தகைய அடையாளங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.

அந்த இலக்கை அடைவதற்கு நான் எந்த சாகசங்களும் செய்யவில்லை. சாகசங்கள் செய்யத் தேவையுமில்லை. நான் என்னுடைய இயல்பிலேயே இருந்தேன். என்னுடைய இயல்பே என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள் - 'நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின். அது அவனது இயல்பிலேயே தெரியும்' என்று சொன்னார்கள். அத்தகைய பக்குவம் சிறுவயதிலேயே - எனக்கு இருந்தது என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக நீங்கள் அறியலாம். பிறக்கும்போதே ஒரு தலைவருக்கு மகனாகப் பிறந்ததும் அதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம். சிறு வயதில் நான் பார்த்த அரசியல் நெருக்கடிகள் - கைதுகள் - போராட்டக் காட்சிகள் - இதற்குக் காரணமாக இருக்கலாம். சாதாரணமாக ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்காத - பார்க்காத - கேள்விப்படாத காட்சிகள் அனைத்தும் எனது வாழ்க்கையில் நடந்ததும் காரணமாக இருக்கலாம். நான் ஐந்து மாதக் குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள்! கைக்குழந்தையாகத் தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த தலைவர் கலைஞருக்கு காட்டினார்கள். நான் 12 வயது பையனாக இருந்தபோது மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசப்பாதுகாப்புச் சட்டப்படி தலைவர் கலைஞர் கைது செய்யப்படுகிறார்கள்.

முரசொலி மாறன் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். கல்லூரிப் படிப்பை முடித்ததும் - நான் மிசாவில் கைதாகிறேன். கோபாலபுரம் வீட்டின் ஓர் அறையாகத்தான் சிறை இருந்தது. அதுதான் என்னைச் செதுக்கியது. கோபாலபுரம் வீடு தமிழ்நாட்டின் நிரந்தரமான அரச சபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. திரையுலகக் கலைஞர்களுக்கு கலைச்சபை. இலக்கியவாதிகளுக்கு சிந்தனைச் சபை. மொத்தத்தில் எங்கள் உயிர்ச்சபை. அந்த உயிர்சபை தான் என்னை உருவாக்கியது. அந்த வீடு என்னை வளர்த்தது – ஆளாக்கியது - பக்குவப்படுத்தியது - பண்படுத்தியது. பல்வேறு பொறுப்புகளுக்கு என்னைத் தகுதிப்படுத்தியது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் புத்தகம் அந்த வீட்டின் வரலாறு! பள்ளிப் பருவத்தில் கழகப்பாடம் படித்த வரலாறு! பாடப்புத்தகங்களோடு சேர்த்து முரசொலி படித்த வரலாறு! கல்லூரிக் காலத்தில் அரிதாரம் பூசி முரசே முழங்கு நாடகம் போட்ட வரலாறு! படித்து முடித்து பணிக்குச் செல்ல விரும்பாமல் மொழிக்கு உயிரைத் தரத் தயார் என முழங்கிய வரலாறு! திரையுலகில் கால் பதித்த வரலாறு! 23 வயதில் துர்க்காவை கரம்பிடித்த வரலாறு! திருமணமான ஐந்து மாத காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட வரலாறு! இப்படி எல்லாத் திருப்பங்களும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான். அதைத்தான் எழுதி இருக்கிறேன்.

கலைஞர் உட்கார்ந்த தலைவர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நினைக்கவில்லை. முதல்வராக இருந்த அண்ணா அவரது காரை அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னார்கள். அப்போது நான் நினைக்கவில்லை, நானும் ஒரு காலத்தில் அந்த நாற்காலியில் உட்காருவேன் என நினைக்கவில்லை. பள்ளி மாணவனாக அண்ணா பிறந்தநாளை நடத்தியபோது அண்ணன் துரைமுருகனை அழைத்து வந்து பேச வைத்தேன். இன்று அவர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். நான் தலைவராக இருக்கிறேன். 1953-இல் நான் பிறந்தபோது குலக்கல்வி முறையை எதிர்த்துப் போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். பள்ளி மாணவனாக நான் இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இன்றும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 1971-ஆம் ஆண்டு அண்ணா விழாவை நான் நடத்திய போது மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கெடுத்து மாநில சுயாட்சிக்காக முழங்கினார்கள். இன்றும் முழங்கி வருகிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். புத்தகத்தில் உள்ளதை அதிகம் சொல்லிவிடக் கூடாது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நீங்கள் வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் புத்தகத்தில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மனிதர்களின் முகங்களை நீங்கள் பார்க்கலாம். நினைவில் இருக்கும் பெயர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். என்னோடு பயணப்பட்ட மனிதர்கள், எனக்குத் துணையாக வந்தவர் கூட்டம் பெரியது. நான் தனிமனிதனல்ல - ஒரு கூட்டம் என்பதை இதன் மூலம் நீங்கள் அறியலாம். இது கொள்கைக் கூட்டம் என்பதையும் அறியலாம்.

பொதுவாழ்வைப் பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்துள்ளது. இப்போதும் இருக்கிறது. அதற்குக் காரணம் எனது குறிக்கோள் என்பது பதவியாக - பொறுப்பாக மட்டும் இருந்தது இல்லை. கொள்கையாக இருந்தது. சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார் - இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா - இயக்கத்தை வழிநடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர் - மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் - இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்! இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல. தத்துவத்தில் அடையாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகிறேன். எனது தத்துவம் என்பதற்கு 'திராவிட மாடல்' என்று பெயர். 'மாடல்' என்பது ஆங்கிலச் சொல்தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'திராவிடவியல் ஆட்சிமுறை'தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில் - வேலைவாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக மேம்பாட்டில் - இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல் - அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற - ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும்.

அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.

இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வீ இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று அருமைச் சகோதரர் ராகுல்காந்தி, “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் - அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு - சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு - செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு - இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக - அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன. 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத்தான் திரு. ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக்கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த மேடையைப் பார்க்கும் போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் நாள் எனக்கும் துர்க்காவுக்கும் திருமணம் நடந்தது. எனக்கு முன்னதாகவே, 'அவரும் நானும்' என்ற தலைப்பில் துர்க்கா தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி விட்டார். மணமக்களாகிய எங்களை வாழ்த்தி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இன்று அவரது பெயரன் ராகுல் காந்தி இந்த மேடையில் இருக்கிறார். பரூக் அப்துல்லா வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இன்று அவரது மகன் உமர் அப்துல்லா இந்த மேடையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவரான - கேரளாவைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இப்போது கேரளாவில் இருந்து பினராயி விஜயன் வந்துள்ளார்கள். நேரில் வந்து எங்களை வாழ்த்துவதற்காக பீகாரில் இருந்து பெருந்தலைவர் ஜெகஜீவன்ராம் வந்திருந்தார்கள். இப்போது பீகாரில் இருந்து தேஜஸ்வீ வந்திருக்கிறார். அன்று எங்கள் திருமணமே, அகில இந்திய மாநாடு போல இருந்தது. இன்று இந்தப் புத்தக வெளியீட்டு விழாவும் அகில இந்திய மாநாடு போல அமைந்திருக்கிறது. தங்களது பல்வேறு அரசியல் பணிகளுக்கு மத்தியில் இங்கே வந்திருந்து - என்னைப் பெருமைப்படுத்திய ராகுல் காந்தியும், பினராயி விஜயனும், உமர் அப்துல்லாவும், தேஜஸ்வீக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in