`இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்; என் மீதான குறைகளை சொல்லுங்கள்'- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி

`இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்; என் மீதான குறைகளை சொல்லுங்கள்'- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி

``இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். மாமன்னன்தான் என்னுடைய கடைசி படம்'' என்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவருடன் ஒத்துழைப்போடு எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை சரிவர செய்வேன்.

தமிழ்நாட்டை ஒரு விளையாட்டு தலைநகரமாக மாற்றப் போகிற திட்டம் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். அதற்கான பணிகளைத் தொடங்கி முடக்கி விடுவதற்கான வேலையை செய்வேன். கூடுதல் பொறுப்பாக இந்த பணியை பார்க்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கின்ற வகையில் விளையாட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்குவேன்.

இளைஞர் அணி பொறுப்பில் இருந்த போதும் என் மீது விமர்சனம் வைத்தார்கள். தற்போதும் விமர்சனம் வைப்பார்கள். நான் இதை எதிர்பார்த்ததுதான். என் மீது விமர்சனம் வைப்பார்கள். வாரிசு அரசியல் என்று சொல்வார்கள். அதை நான் தடுக்க முடியாது. இதனை எனது செயல் மூலமாக தான் செய்து காட்ட முடியும். அதற்கான பணியை தொடங்குவதற்கு பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும். என் மீது ஏதும் குறை இருந்தால் சொல்லுங்கள். உங்கள் விமர்சனங்களை வையுங்கள். அப்போதுதான் என் பணிகளை நான் நன்றாக செய்ய முடியும். இப்போதுதான் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். துறையை சரி செய்து ஆய்வு செய்வதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி கண்டிப்பாக முதல்வரின் ஆலோசனையின் பேரில் எல்லா அமைச்சருடைய அறிவுறுத்தலின் பேரில் பணியை செய்வேன்.

இனி நான் சினிமாவில் நடிக்கவில்லை. கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பதவி என்று சொன்னவுடன் அவர்தான் முதலில் என்னை வாழ்த்தினார். அந்த படம் தற்போது பண்ணவில்லை. கடைசி படம் மாரிச்செல்வன் ஆசைப்படி மாமன்னன் தான் எனது கடைசி படம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in