வெற்றியாளர்களை கண்காணிப்பேன்!- முதல்வர் ஸ்டாலின் அதிரடி

வெற்றியாளர்களை கண்காணிப்பேன்!- முதல்வர் ஸ்டாலின் அதிரடி

"கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வார்கள். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன்" முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டணியரின் ஒற்றுமை என்பது தேர்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவும், அத்தனையும் உள்ளடக்கிய பாச உணர்வாகவும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு உழைத்த கூட்டணிக்கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், தோழமை கட்சி தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

திமுகவின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'திராவிட மாடல்' ஆட்சியை முன்னிலும் திறம்படக் கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட மடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம் தான் உள்ளாட்சி தேர்தல் வெற்றி. 21 மாநகராட்சி, 132 நகராட்சி, 435 பேரூராட்சி என கைப்பற்றி தமிழ்நாட்டையே முழுமையாக வென்றுள்ளது திமுக கூட்டணி. வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதில் மக்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

திமுகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அவதூறு மூலம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். மக்கள் எந்நாளும் உதயசூரியனை தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதை காட்டிவிட்டார்கள். கரோனா கட்டுப்பாடு காரணமாக நேரடியாக வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. காணொலி மூலமாக பெரும்பான்மை மாவட்ட மக்களை சந்தித்தேன். வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன். கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வார்கள். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in