`திமுகவின் அச்சுறுத்தலை நீதிமன்றத்தில் சந்திப்பேன்!

ரூ.100 கோடி மானநஷ்டஈடு நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்
`திமுகவின் அச்சுறுத்தலை நீதிமன்றத்தில் சந்திப்பேன்!

"திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன்" என்று திமுக அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ``முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்டஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு.க சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், திமுக அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்..." என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in