`ஓட்டுப்போடுங்கள் என்றேன், மக்கள் எனக்கு போடவில்லையே'- ரம்மி விளம்பரம் குறித்த கேள்விக்கு சரத்குமார் அதிரடி

`ஓட்டுப்போடுங்கள் என்றேன், மக்கள் எனக்கு போடவில்லையே'- ரம்மி விளம்பரம் குறித்த கேள்விக்கு சரத்குமார் அதிரடி

``ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறேன். ஓட்டு போடுகிறார்களா? இதெல்லாம் கேட்க மாட்டார்கள். ரம்மி போய் விளையாடுங்கள் என்று சொன்னாலும் விளையாடுவார்களா?'' என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

சென்னை எழும்பூரில் இன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஒரு நாட்டிற்கு மனிதவளம் முக்கியம். அந்த மனிதவளம் உள்ள நாடு இந்தியா. அகில இந்திய அளவில் பார்க்கும்போது 4 மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்விக்கு நாங்கள் இன்று சொல்லலாம் என்று இருக்கிறோம். அது மட்டுமின்றி போதைப்பொருள் முக்கியமாக பள்ளி சிறுவர்களிடம் சென்றடைகிறது என்பது வேதனையாக இருக்கிறது.

அண்மையில் நான் வசிக்கின்ற ஒரு பள்ளிக்கூடத்தில் 8-வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பள்ளி கழிவறையில் கஞ்சா பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை ஆசிரியர்கள் கண்டித்து இருக்கிறார்கள். பெற்றோர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் கண்டித்து இருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் போதை. இந்த போதை என்னவெல்லாம் செய்கிறது என்பது உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் நடைபெறுகிற விபத்துகளில் 25 சதவீதம் மது போதையால் வாகனம் ஓட்டுவது தான் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மது போதையினால் குடும்பத் தகராறு, குடும்ப பிரச்சனை, தகாத உறவு, தகாத செயல்பாடு போன்ற குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. போதை, கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் தங்கள் வீட்டிலேயே திருடும் நிலை ஏற்படுகிறது. தன்னிலை மறந்து இந்த செயல் நடைபெறுகிறது.

இளைஞர்களை நாம் பேணி காக்க வேண்டும். இந்த மனிதவளம் சீரழிந்து போய் விட்டால் இந்திய பொருளாதாரம் வருங்காலத்தில் பாதிக்கும் என்ற அடிப்படையில் இதற்கு கண்டிப்பாக விழிப்புணர்வு தேவை. தமிழகத்தில் 36,000 கோடி மதுவிலக்கு மூலம் கிடைக்கிறது. அதனை எப்படி ஈடுகட்ட முடியும் என்பது எல்லோருக்கும் ஒரு கேள்விக்குறியாக தான் இருக்கிறது. பூரண மதுவிலக்கை உடனே முன்னெடுத்து செய்து விடலாம் என்று யாரும் சொல்ல முடியவில்லை. இளைஞர்களை படிப்படியாக உயர்த்திக்கொண்டு வந்தால் இப்படிப்பட்டவைகளை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்திற்குள் போதைப்பொருள், கஞ்சா எப்படி வருது என்றே தெரியவில்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வருகிறது என்று சொல்கிறார்கள். இதனை கண்காணிக்க காவல்துறையினர் குறைந்த அளவிலே இருக்கிறார்கள். இதற்காக தனிப்படை அமைக்கப்பட வேண்டும். கஞ்சா கடத்தவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுத்தால் இதனை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன். 36,000 கோடி வருமானத்தை வேறு வழியில் பெருக்குவதற்கு தற்போது சாத்திய கூறு இல்லை. அப்படி வாய்ப்பு இருந்தால் மதுவிலக்கு அமல்படுத்தி இருப்பார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

1937-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது மதுவிலக்கு சாத்தியக்கூறு இருந்திருக்கிறது. 34 ஆண்டுகளில் மதுவிலக்கு தமிழகத்தில் இருந்திருக்கிறது. அப்படியென்றால் அப்போது எப்படி நடந்தது. அதை பின்பற்றி அப்போது என்னென்ன செய்தார்கள், வருமானத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ரம்மி விளையாட கூடாது என்று நினைத்தால் யாரும் அதில் போக மாட்டார்கள். சரத்குமார் சொன்னால் இதை கேட்டு விடுவார்களா? ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறேன். ஓட்டு போடுகிறார்களா? ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறேன். வாங்காமல் இருக்கிறார்களா?. இதெல்லாம் கேட்க மாட்டார்கள். ரம்மி போய் விளையாடுங்கள் என்று சொன்னாலும் விளையாடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in