`நம்பர் 2 ஆக இருக்க பட்னாவிஸ் விரும்பவில்லை; அவரது முகபாவமே சாட்சி'- கொளுத்திப்போடும் சரத்பவார்!

`நம்பர் 2 ஆக இருக்க பட்னாவிஸ் விரும்பவில்லை; அவரது முகபாவமே சாட்சி'- கொளுத்திப்போடும் சரத்பவார்!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கவில்லை, அவரது முகபாவமே அனைத்தையும் கூறுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நேற்று ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணைத் முதல்வராகவும் பதவியேற்றதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சரத் பவார் அளித்துள்ள பேட்டியில், "நம்பர் டூ இடத்தை பெற்றதை தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் ஏற்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவரது முகபாவமே அனைத்தையும் காட்டுகிறது. நாக்பூரைச் சேர்ந்த அவர் ஆர்எஸ்எஸ்சில் பணிபுரிந்தவர், அங்கு ஒரு உத்தரவு வரும்போது அதனைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி பட்னாவிஸ் ஒரு ஜூனியரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராவார் என அனைவரும் நினைத்தார்கள். பாஜகவின் மத்திய தலைமை உத்தரவு பிறப்பித்த பிறகு முதல்வர் பதவி ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. அதை யாருமே எதிர்பார்க்கவில்லை, ஏக்நாத் ஷிண்டேவுக்கே இது தெரியாது என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், 5 ஆண்டுகள் முதல்வராகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய தேவேந்திர பட்னாவிஸ் மத்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது " என்று கூறினார்.

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்றும், தான் அமைச்சராகப்போவதில்லை என்றும் நேற்று மாலை அறிவித்தார் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். அதன்பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வராக பதவியேற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in