ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம்.

உயிருள்ளவரை ஓபிஎஸ்! உறுதியாகச் சொல்லும் அதிமுக மாவட்டச் செயலாளர்!

தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நின்றவர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி நகர்ந்துவிட்ட நிலையில், உயிர் உள்ளவரை ஓ.பி.எஸ் பக்கம் தான் என உறுதியாகக் கூறுகிறார் அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர்!

எஸ்.ஏ.அசோகன்
எஸ்.ஏ.அசோகன்

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சிக்குள் இருந்து குரல் எழுந்துள்ளது. அதிமுக அமைப்பு ரீதியாக இப்போது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர். ஒற்றைத் தலைமை கோஷத்தால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கியிருக்கிறது. இதனால் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமை குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை, பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசிவருகிறார்.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதில் 65க்கும் அதிகமான மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நகர்ந்துவிட்டனர். நேற்று ஒரேநாளில் ஓ.பி.எஸ் பக்கம் இருந்த அலெக்சாண்டர், பலராமன், கணேசராஜா, சாத்தூர் ரவிச்சந்திரன், தாமரை ராஜேந்திரன் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு கொடுத்தனர். இன்று முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், டி.கே.எம் சின்னய்யாவும் ஓ.பி.எஸ் அணியில் இருந்து, ஈ.பி.எஸ்க்கு ஆதரவாக மாறினர்.

தர்மயுத்தத்தின் போது ஓ.பி.எஸ் பக்கம் நின்று, அவரால் மீண்டும் அமைச்சராகவும் ஆக்கப்பட்டவர் மாஃபா பாண்டியராஜன். அவரும்கூட எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நகர்ந்துவிட, எம்.எல்.ஏ, எம்.பி என இதுவரை எந்த மக்கள் பிரதிநிதித்துவ பதவியும் வகிக்காவிட்டாலும் ஓ.பன்னீர் செல்வத்தின் பக்கம் நிற்கிறார் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன். நெல்லை மண்டல அதிமுகவில் ஓ.பி.எஸ் பக்கம் நிற்கும் ஒரே மாவட்டச் செயலாளர் இவர்தான்!

குமரி மாவட்ட ஆவின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஏ.அசோகனிடம் காமதேனு இணையதளத்திற்காகப் பேசினோம்.”என் குடும்பமே அதிமுகதான். என் அப்பா சுயம்புலிங்கம் எம்.ஜி.ஆர் காலத்தில் விவசாய அணி மாவட்டச் செயலாளராக இருந்தார். அம்மா காலத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக இருந்தார். நான் அவரைப் பார்த்தே வளர்ந்ததால் பள்ளிகூடத்தில் படித்தபோது கட்சிக்கொடி பிடித்துவிட்டேன். ஊரில் தேர்தல் வேலை செய்ய பதின் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டேன். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது குமரியில் நான் தான் அதை முன்னெடுத்தேன். நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு தினமும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என அமளிதுமளிப்படுத்தினோம். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைப்புக்குப் பின்பு எனக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நான் கனவில்கூட யாருக்கும் துரோகம் செய்யாதவன். வாழ்வோ, சாவோ ஒருநாள்கூட யாருக்கும் துரோகம் செய்தது இல்லை. எதுவே நடந்தாலும் என் இறுதிமூச்சு இருக்கும்வரை ஓ.பி.எஸ் பக்கமே நிற்பேன். அவரோடு நிற்பதும், அவரின் அணுக்கத் தொண்டனாக கடைசி நொடிவரை இருப்பதே பெருமை என நினைக்கிறேன். முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி, முக்கிய பிரமுகர்கள்வரை இன்றுமட்டுமே பத்துக்கும் அதிகமானோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தருமாறு போனில் அழைத்தார்கள். நான் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் கரம் பற்றித்தான்!”என்கிறார் எஸ்.ஏ.அசோகன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in