`நான் சோர்வோடுதான் பேசுகிறேன்'- ஆர்.எஸ்.பாரதி `அப்செட்' ஆக என்ன காரணம்?

`நான் சோர்வோடுதான் பேசுகிறேன்'- ஆர்.எஸ்.பாரதி `அப்செட்' ஆக என்ன காரணம்?

திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்ததால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிருப்தி அடைந்தார்.

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்செங்கோடு தேரடி வீதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசுகையில், "திருச்செங்கோடு தொகுதியில் பலமுறை திமுக வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈஸ்வரன் போட்டியிட்ட போது வெற்றி பெற செய்தீர்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள். நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தலில் 20 பேரை வெற்றி செய்த உங்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வளவு வெற்றிகளை தந்த திருச்செங்கோடு வாக்காளர்கள் மத்தியில் நான் சோர்வோடுதான் பேசுகிறேன். இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறேன்" என்றார்.

கடந்த நகர்மன்றத் தேர்தலில் திமுகவில் கோஷ்டி மோதல் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது . திமுக கட்சி அதிகாரபூர்வ நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன் நகர்மன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். திமுகவை சேர்ந்த நளினி சுரேஷ்பாபு என்பவர் 33 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார். இதனால் திருச்செங்கோடு திமுகவில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் 2 அணிகளாக 2 நிகழ்வுகளாகவே நடந்து வருகிறது.

இன்றைய கூட்டத்திற்கு திமுக முக்கிய பிரமுகர்கள் நகர்மன்றத் தலைவர் நளினி சரேஷ்பாபு உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தற்போது உள்ள திருச்செங்கோடு நகர்மன்ற நிர்வாகத்தில் மாற்றம் வரும் என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in