‘புல்வாமா பற்றி அப்போதே பேசினேன், பிரதமர் அமைதியாக இருக்கச் சொன்னார்’ - அமித் ஷாவுக்கு சத்யபால் மாலிக் பதிலடி!

சத்யபால் - மோடி- அமித் ஷா
சத்யபால் - மோடி- அமித் ஷாபுல்வாமா விவகாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மதிக்கிறேன் என்றும், அவருடன் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபட விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பதவிக்காலம் முடிந்த பிறகுதான் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதாகவும், அதனால் அவரது நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த குற்றச்சாட்டை சத்ய பால் மாலிக் மறுத்துள்ளார். அவர், "நான் அமித் ஷாவை மிகவும் மதிக்கிறேன், நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், புல்வாமா விவகாரம் மற்றும் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து நான் ஆளுநராக இருந்தபோதே பேசியுள்ளேன்.

புல்வாமா விவகாரம் பற்றி அப்போதே பேசியிருந்தேன். தேதியை என்னால் உடனடியாக நினைவுபடுத்த முடியவில்லை. நான் இதை பிரதமரிடம் எழுப்பினேன், இதைப் பற்றி பேச வேண்டாம் என்றும், நான் அமைதியாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் மேகாலயா ஆளுநராக இருந்தபோது அவர்களிடம் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஏதாவது செய்யுங்கள் என்று கூறினேன். பின்னர் அரசாங்கமே புதிய பண்ணை சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கூறினார்

தான் ஜம்மு-காஷ்மீர் கவர்னராக இருந்தபோது, பிப்ரவரி 14, 2019 புல்வாமா சம்பவத்திற்கு மத்திய அரசின் தவறே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியபோது, பிரதமர் நரேந்திர மோடி தம்மை வாயடைத்து விட்டார் என்று அண்மையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சத்யபால் மாலிக் கூறியிருந்தார். அவர் “ புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு பிரதமரிடம் சொன்னேன். இது நமது தவறு. நாம் சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் செல்ல விமானம் கொடுத்திருந்தால், சிஆர்பிஎஃப் கான்வாய் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்திருக்காது என்றேன். அதற்கு பிரதமர் என்னிடம், ‘நீங்கள் இப்போது அமைதியாக இருங்கள்’ எனச் சொன்னார்” என்று கூறினார்.

இருப்பினும், பிப்ரவரி 15, 2019 அன்று அதிகாலை 1.07 மணிக்கு என்டிடிவிக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் சத்யபால் மாலிக், “எங்களுக்கு தாக்குதல் சாத்தியங்கள் குறித்த உள்ளீடுகள் கிடைத்ததால் உளவுத்துறை தோல்வி எதுவும் இல்லை. ஆனால் நிச்சயமாக ஒருவித அலட்சியம் இருந்தது. இவ்வளவு பெரிய வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தாமல் பயங்கரவாதிகள் கொண்டு வரமுடிந்தது என்றால், அதற்கு எங்கள் தரப்பில் ஏற்பட்ட தோல்விதான் காரணம்” என கூறியிருந்தார். அதே நாள் காலை 10.01 மணிக்கு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு நேர்காணலில் மாலிக், “எங்களால் இதை உளவுத்துறை தோல்வி என ஏற்றுக்கொள்ள முடியாது. நெடுஞ்சாலையில் வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை எங்களால் கண்டறியவோ அல்லது சோதனையிடவோ முடியவில்லை. நாமும் தவறு செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in