`அரசியலை புறந்தள்ளுகிறேன்'- வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகும் கருணாஸ்!

`அரசியலை புறந்தள்ளுகிறேன்'- வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகும் கருணாஸ்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் `வாடிவாசல்' திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைகிறார். "போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன்" என்று கருணாஸ் கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு- வடமாடுகளின் வாழ்வியல் சொல்லும் `வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் கதாநாயகனாக சூர்யா நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். தமிழர் வீரம் செறிந்த வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைகிறார்.

வாடிவாசலில் உதவி இயக்குநராக பணியாற்றும் நடிகர் கருணாஸ் கூறுகையில், "கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வை தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரம் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற இருக்கிறேன். கடைசி வரை கற்றுக் கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக் கொண்ட வெற்றிக்கு என் நன்றி.

தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறை சாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். ராமனுக்கு அணிலாக இருப்பதை போல், இந்த வெற்றி அணியில் வெற்றி மாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன். நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டிருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.