அரசியலை இப்போது மிஸ் பண்றேன்... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்இந்து தமிழ் திசை

இப்போது அரசியலை மிஸ் பண்றேன். ஆனால் ஆளுநர் பதவி மூலம் மக்களுக்கு உதவும் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது . என் மீது எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்

தனியார் செய்தி நிறுவனத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மட்டும் பாலமாக இருப்பவர் அல்ல. மக்களுக்கும் பாலமாக இருப்பவர். பாசமாகவும் இருப்பவர். பாசமாக இருப்பது தான் மோசமாக மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறது. ஆளுநர் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் காலம்காலமாக இருக்கிறது. அவர்களுக்கென்று சில விதிமுறைகள், கடமை இருக்கிறது. ஆனால் அவர்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டும். அரிதாகதான் வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நாங்கள் சொல்வதற்கெல்லாம் ரப்பர் ஸ்டேம்ப் போல் கையெழுத்து போட்டு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் இருப்பது தவறு. ஏனென்றால் ஆளுநர்கள் என்பவர்கள் ஸ்பீட் ப்ரேக்கர் போல், அவை நம்மை விபத்தில் இருந்து காப்பாற்ற தானே, தவிர தடையாக இருக்கிறது என்று கூற முடியாது” என்றார்

தமிழிசை சௌந்தராஜன்
தமிழிசை சௌந்தராஜன்

தொடர்ந்து பேசிய அவர், “ நீட் விலக்கு மசோதா என்பது உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. தமிழ்நாடு ஆளுநராக மட்டுமில்லாமல் ஒரு மருத்துவராகவும் வேறுமாதிரி நான் முடிவெடுத்திருப்பேன். ஆன்லைன் சட்ட மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் படி அது மத்தியப் பட்டியலில் இருக்கிறதா அல்லது மாநில பட்டியலில் இருக்கிறதா எனும் சர்ச்சை இருக்கிறது. மத்தியப் பட்டியலில் இருக்கும்போது அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். எனவே நான் அவர்களுக்கு அனுப்பி இருப்பேன்.

நான் மக்களுக்காக ஆளுநராக தான் செயல்பட்டு வருகிறேன். நாங்கள் மாற்றங்களாக நினைப்பது, சிலருக்கு அரசியல் நகர்வுகளாக தோன்றலாம். ஆளுநருக்கு இருக்கும் சிக்கல் இது. ஆளுநர்கள் பொறுப்பு மிக்கவர்கள். அவர்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள் அல்ல. எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் தேவைப்படுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆளுநர்களை சந்திப்பதையே முதலமைச்சர்கள் தவிர்க்கிறார்கள். இப்போது அரசியலை மிஸ் பண்றேன். ஆனால் ஆளுநர் பதவி மூலம் மக்களுக்கு உதவும் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது . என் மீது எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன்” எனப் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in