`உங்களை கண்காணிக்க பிக்பாஸ் போல் கேமரா வைத்துள்ளேன்'- கட்சியினரை அதிரவைத்த அன்புமணி

`உங்களை கண்காணிக்க பிக்பாஸ் போல் கேமரா வைத்துள்ளேன்'- கட்சியினரை அதிரவைத்த அன்புமணி

"உங்களை கண்காணிக்க பிக்பாஸில் உள்ளது போல கேமரா அமைத்துள்ளேன்" என்று கட்சியினர் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி அதிரவைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மயிலம் எம்எல்ஏ சிவகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக நிர்வாகிகள் செல்போன் அரசியலை கைவிட்டு களப்பணியாற்ற வேண்டும். வரும் நாட்களில் நான் தொகுதிவாரியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல உள்ளேன். அப்போது நான் செல்லும் கிராமங்களில் பாமக கிளை இல்லாவிட்டால் சம்மந்தப்பட்ட ஒன்றிய செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களை கண்காணிக்க பிக்பாஸில் உள்ளது போல கேமரா அமைத்துள்ளேன். 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி அமையும்" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியது அவர், "பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் தனிகவனம் செலுத்தவேண்டும். காலநிலை அவசர நிலை பிரகடனத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும். 100 ஆண்டுகளில் அதிகமான வெப்பம் கடந்த ஆண்டு என்றார்கள். அதனை இந்தாண்டு வெப்பம் முறியடித்தது. பெங்களூரு, பாகிஸ்தானின் கடும் வெள்ளம். சீனா, ஐரோப்பாவில் கடும் வறட்சி. இந்த காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இயற்கையை நாம் மீட்டெடுக்கவேண்டும். காலதாமதப்படுத்தினால் மீட்க முடியாது. இந்தி மொழி திணிப்பு குறித்து நான்தான் முதலில் அறிக்கைவிட்டேன்.

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று நேற்று உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும். நேரு பிரதமராக இருந்த காலத்தில், நமக்கெல்லாம் உறுதியளித்தார். 1965-ல் ஒரு சட்டம் வந்தது. இந்தி பேசாத மாநிலங்களில், அவர்கள் விருப்பபடாமல், இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். காரணம் அப்போது மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. தற்போதுள்ள பாஜக ஆட்சி வேண்டுமென்றே, இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிப்பதை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை கடுமையாக எதிர்ப்போம். இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தால், குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கட்டாயம் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று திணித்தால், கடுமையாக எதிர்ப்போம்.

இந்தியாவில் தேசிய மொழி என்பது எதுவும் கிடையாது. அலுவல் மொழிதான் இருக்கிறது. அதில் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. அவையெல்லாமே அலுவல் மொழிதான். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி போல இந்தியும் ஒரு அலுவல் மொழிதான். இணைப்பு மொழி ஆங்கிலம். தற்போது இந்த நிலைக்குழு, இணைப்பு மொழி ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். கடந்த காலங்களைவிட மிக கடுமையான போராட்டம் நடக்கும்.

எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன. அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள். அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கடலூர் மாவட்டத்தில் ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் வன்கொடுமை தடை சட்டம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 50 சதவீதம்கூட முடிக்கபடவில்லை. தமிழகத்தில் வடிகால் மாவட்டம் கடலூர். இங்குள்ள நீர் நிலைகளை தூர்வாரவேண்டும். வெள்ளத்தை வரும் காலத்தில் வரமாக பார்க்கவேண்டும். புதிய நீர் நிலைகளை உருவாக்கவேண்டும். வாடகைத்தாய் என்பது உலக அளவில் நடைபெறுகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை போக்க வாடகைதாய் முறையை அரசு அங்கீகரித்துள்ளது. 2026 தேர்தலுக்கான வியூகங்களை 2024-ம் ஆண்டு அமைப்போம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in