வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டில், “ஏப்ரல்14ம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்.அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை.
தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்