`எனக்கு இந்த வாகனம் வேண்டாம்'- சர்ச்சையானதால் அமைச்சர் ரகுபதி எடுத்த அதிரடி முடிவு

`எனக்கு இந்த வாகனம் வேண்டாம்'- சர்ச்சையானதால் அமைச்சர் ரகுபதி எடுத்த அதிரடி முடிவு

கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்படாத வாகனத்தில் அமைச்சர் ரகுபதி வலம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த காரை பயன்படுத்தாமல் தனது காரில் அமைச்சர் வலம் வருகிறார்.

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கார்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கார்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு தமிழக அரசு சார்பில் அந்த கார் ஒதுக்கப்பட்டது. அந்த காருக்கு நம்பர் பிளேட் வாங்கப்பட்டது. ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அந்த கார் பதிவு செய்யப்படவில்லை. இதனால் இன்சுரன்ஸ் எடுக்கப்படவில்லை. இந்த காரைத் தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த காரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாதது இருந்தது அமைச்சருக்கு தெரியவில்லை. இந்நிலையில் அந்த கார் குறித்த செய்தி பத்திரிகையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி உடனடியாக மாவட்ட ஆட்சியரை அழைத்து, எனக்கு இந்த வாகனம் வேண்டாம். உடனடியாக வேறு வாகனத்தை மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்த பிறகு அந்த வாகனத்தை எனக்கு கொடுங்கள் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வாகனத்தை பயன்படுத்தாத சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது சொந்த வாகனத்தில் பயணம் செய்து வருகிறார். அவரது வாகனத்தில் தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in