`ஜெயலலிதாவுக்கு இருந்த உடல் உபாதைகள் பற்றி எனக்கு தெரியாது'

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்
`ஜெயலலிதாவுக்கு இருந்த உடல் உபாதைகள் பற்றி எனக்கு தெரியாது'

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடம் விசாரணை நடந்து வருகிறது. "ஜெயலலிதாவுக்கு இருந்த உடல் உபாதைகள் பற்றி எனக்கு தெரியாது" என்று ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், இறுதிகட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஓபிஎஸ்சும், இளவரசியும் இன்று ஆஜராகியுள்ளனர். காலை 10.30 மணிக்கு இளவரசியும், 11.30 மணிக்கு ஓபிஎஸ்சும் ஆஜரானார்கள்.

இதையடுத்து, ஆணையம் சார்பில் ஓபிஎஸ்சிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி எனக்கு தெரியாது என்றும் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தெரியாது என்றும் 2016 செப்டர்பர் 22ல் மருத்துவமனையில் எதற்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முந்தையநாள் மெட்ரோ ரயில் நிகழ்வில்தான் ஜெயலலிதாவை பார்த்தேன் என்றும் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த விவரம் எனக்குத் தெரியாது என்றும் பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்தேன் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

அப்போலோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in