`நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது'- ஆளுநர் தமிழிசை திடீர் கொந்தளிப்புக்கு என்ன காரணம்?

`நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது'- ஆளுநர் தமிழிசை திடீர் கொந்தளிப்புக்கு என்ன காரணம்?

“முதல்வர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. தமிழிசை சவுந்தரராஜன் நூலை வெளியிட, டாக்டர் சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், " தெலங்கானா முதல்வருடன் பணிபுரிவது சவாலாகத் தான் உள்ளது. ஆனால், ஆளுநராக எனது பணியை சரியாக செய்து வருகிறேன். தெலங்கானா மாநிலத்தில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள். பெண் என்றால் வலிமை இல்லையா? பெண்ணாக எனக்கு இருக்கும் வலிமை வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. முழு நேர ஆளுநர் வேண்டுமென விமர்சிக்கிறார்கள். பகுதி நேர ஆளுநராக நான் செய்த பணிகள் அதிகம்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "என் பணிகள் குறித்து புதுச்சேரி முதல்வர் பாராட்டு தெரிவிக்கிறார். ஆனால், தெலங்கானா முதல்வரோ விமர்சனங்களை அடுக்குகிறார். ஆளுநரும், முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரியும், ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலங்கானாவும் உதாரணமாக இருக்கின்றன. தெலங்கானா மாநில முதல்வர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. சும்மா டெல்லி சென்றால் கூட அதற்குள் என்னை இட மாறுதல் செய்யப் போவதாக சொல்கிறார்கள்" என்றார் தமிழிசை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in